விழித்திரு – விமர்சனம்

vizhithiru (1)

பிரபல தொழிலதிபர் சுதாசந்திரன், அமைச்சர் ஆர்.என்.ஆர் மனோகர், போலீஸ் அதிகாரி நாகபாபு ஆகியோருடன் சேர்ந்துகொண்டு தங்களுக்கு எதிராக கிளம்பும் பத்திரிகையாளரான எஸ்.பி.பி.சரணை கொலை செய்கிறார்கள்.

அம்மாவின் மருத்துவ செலவிற்கு பணம் எடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பும் கிருஷ்ணா, பணத்தை பறிகொடுத்ததுடன், அந்த கொலையை நேரில் பார்த்ததற்காகவும் முக்கியமான ஆதாரம் அவரிடம் சிக்கியிருப்பதாகவும் நினைத்து போலீஸ் மற்றும் ரவுடி கும்பலால் துரத்தப்படுகிறார்.

தனது செல்ல நாய்க்குட்டியை தொலைத்துவிட்டு இரவு நேரத்தில் பரிதவிப்புடன் அதை தேடும் தனது மகள் சாராவுடன் நகர தெருக்களில் அலையும் பார்வையற்ற வெங்கட்பிரபு திடீரென மகள் காணாமல் போக நிலைகுலைந்து போகிறார்.

கோடீஸ்வர இளைஞன் ஒருவன் திடீரென தான் பார்க்கும் அழகிய பெண்ணுக்காக, தனது பிறந்தாநாள் பார்ட்டி, தனது நண்பர்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு அவளுடன் இரவு நேரத்தில் காரில் பயணமாகிறான்..

நகை திருடப்போன இடத்தில், வீட்டு உரிமையாளரான தம்பி ராமையாவிடம் சிக்கிக்கொண்ட திருடி தன்ஷிகாவை காப்பாற்றி தப்பிக்கவைக்கும் இன்னொரு திருடனான விதார்த், அந்த நகையை பங்குபோட அந்த இரவு முழுவதும் தன்ஷிகா மற்றும் போலீஸுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார்.

இந்த நான்கு தரப்பினரும் அந்த நள்ளிரவில் தங்களை அறியாமலேயே ஒருவருக்கொருவர் எப்படி இணைகிறார்கள், அதனால் அந்த கொலைகார கும்பலால் இவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதுதான் மொத்தப்படமும்.

ஒரே இரவில் நடக்கிற நான்கு கதைகளை ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து செல்கிறது. நான்கு திசைகளிலிருந்து நான்கு கதைகள் தனித்தனியே பயணிக்கிறது.

பணத்தையும் பறிகொடுத்துவிட்டு, கொலைகாரர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் பரிதவிப்பை கிருஷ்ணா அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மனித மனங்களின் விகாரம் அறியாமல் இரவில் நாய்க்குட்டியை தேடும் பேபி சாரா சோ க்யூட். அவரது தந்தையாக மகளின் சொல்லை தட்டமுடியாத கையறு நிலையை காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தி பார்வையற்ற கேரக்டரில் செமையாக ஸ்கோர் செய்கிறார் வெங்கட்பிரபு.

திருடர்களாக வரும் விடாக்கண்டன்-கொடாக்கண்டன் கேரக்டர்களில் விதார்த்-தன்ஷிகா இருவரும் வரும் பகுதி சீரியசான கதையில் ஜாலி எபிசோட். ‘என் தாய்க்குலத்தின் தலைவா’ என பெருமிதப்படும் தன்ஷிகாவையா நீங்கள் மேடையில் அப்படி டார்ச்சர் செய்தீர்கள் டி.ஆர் சார்..? ராகுல் பாஸ்கரன்-எரிக்காவின் புதுச்சேரி டூ சென்னை பயணம் த்ரில்லான ரொமான்ஸ் பக்கம்.. சுதாசந்திரன் எல்லாம் வில்லியா..? என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..?

சிரஞ்சீவியின் தம்பி நாகபாபு கெட்ட போலீஸாக பாஸ்மார்க் வாங்குகிறார். ஆர்ஜேவாக வரும் அபிநயா உயிர்த்துடிப்புடன் நடித்துள்ளார். நல்ல அதிகாரியாக வரும் ட்ராபிக் சார்ஜெண்டின் முடிவு உச் கொட்ட வைக்கிறது. தன்ஷிகாவுடன் ஜோடிசேர துப்பாக்கியுடன் அலையும் தம்பிராமையா, குழந்தையை கடத்தும் ராம்ஸ், குழந்தையை தேட உதவும் ராகுல் தாத்தா, கணவன் மனைவி என நினைத்துக்கொண்டு விதார்த்-தன்ஷிகாவை விடாமல் துரத்தி ஒன்றுசேர்க்கும் லேடி போலீஸ் ஈசன் சுஜாதா என பலரும் அழுத்தமான பங்களிப்பை தந்துள்ளார்கள்.

படத்தில் நாயகனான கிருஷ்ணாவுக்கு முத்துக்குமார் என பெயர் சூட்டியது, ஒரு இல்லத்துக்கு திலீபன் இல்லம் என பெயர் சூட்டியிருப்பது,. தொலைக்காட்சியிலே பேட்டி கொடுக்கும் பாத்திரங்களில் தமிழகத்தைச் சார்ந்த முக்கியமான நிகழ்வுகளை பேசவைத்திருப்பது என இயக்குநர் மீரா கதிரவன், தான் சிறந்த தமிழ் தேசிய உணர்வாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் தெரியப்படுத்திருக்கிறார்.

‘மாநகரம்’ படத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு இப்போது தாமதாக வந்திருப்பதாலோ என்னவோ, “அடடே மாநகரம் படம் மாதிரியே எடுத்திருக்காங்கப்பா” என்று சொல்லிக்கொண்டே ரசிகர்கள் வெளியேறுகிறார்கள். அதுதான் இந்தப்படத்தின் பலமும் பலவீனமும்..

இரண்டு மணி நேரம் இருக்கையில் உங்களை தூங்க விடாமல் ‘விழித்திரு’ந்து பார்க்க வைக்கும் வகையிலான படம் தான் இது. தாராளமாக பார்க்கலாம்.