கார்த்தியுடன் முதன்முறையாக இணையும் விவேக்..!


தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் படத்திற்கு நேற்று அமர்க்களமாக பூஜை போட்டு, அதற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பூஜையில் கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார் சிவகுமார்.

ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. நடிகை ஜெயசுதா  இந்த படத்தில் கார்த்திக்கு அம்மாவாக மீண்டும் நடிக்கிறார். முதன்முறையாக கார்த்தியுடன் காமெடி கூட்டணி அமைக்கிறார் விவேக். கூடவே மனோபாலாவும் உண்டு. தமிழ்சினிமாவுக்கு இது உண்மையிலேயே அசத்தலான கூட்டணி தான்..

இந்த மல்டி ஸ்டாரர் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இவர் தான் கடந்த வருடம் ராம்சரணை வைத்து சூப்பர் ஹிட்டான ‘எவடு’ படத்தை இயக்கியவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக இருக்கும் இந்தப்படத்தை பிவிபி சினிமா பிரமாண்டமாக தயாரிக்கிறது.

மலையாளத்தில் ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘பெங்களூர் டேய்ஸ்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த கோபிசுந்தர் தான் இந்த படத்துக்கும் இசை அமைக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இவர்களது  கூட்டணி வர்த்தக ரீதியாக அகில இந்திய அளவில் உள்ள நடிகர்களுக்கும் சவால் விடும் என்கிறார்கள் வியாபார முக்கியஸ்தர்கள்.