விஷ்ணு விஷால் ஜோடியானார் ரெஜினா..!

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடிப்பதற்கு முன்னும் சரி, அதில் நடித்த பின்னும் சரி, ரெஜினாவின் திறமையை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இதற்கு இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார் ரெஜினா.

அதன் பயனாக தற்போது, தமிழிலும் அழைப்புகள் வரவே, கடந்த ஒரு வருடமாக பிசியான நடிகையாக மாறிவிட்டார் ரெஜினா. சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, ராஜதந்திரம்-2 உள்ளிட்ட ஐந்து படங்களுக்கு மேல் ரெஜினா கைவசம் உள்ளன. இந்தநிலையில் விஷ்ணு விஷால் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ரெஜினா.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட விஷ்ணு விஷால் தனது இரண்டாவது தயாரிப்பாக ‘கதாநாயகன்’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அதில் கேத்தரின் தெரசா கதாநாயகியாக நடிக்கிறார்.

இதை தொடர்ந்து தனது தயாரிப்பில் மூன்றாவது படத்தை ஆரம்பிக்கும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார் விஷ்ணு விஷால்.. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப்படத்தில் தான் ரெஜினா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.