ஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து சென்று திருடர்களிடம் பறிகொடுத்தது குறைந்தது என்றால் இன்னொரு பக்கம் ஆன்லைனில் நம் பணத்தை டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்க ஒரு பெருங்கும்பல் இறங்கி வேலை செய்துகொண்டு இருக்கிறது இன்னொரு அதிர்ச்சியான விஷயம்..

கடந்த வருடம் இரும்பத்திரை படம் மூலம் வங்கிக்கடன் என்கிற பெயரில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்திய விஷால் தற்போது சக்ரா என்கிற படத்தின் மூலம் இந்த ஆன்லைன் மோசடிகளை தோலுரித்து காட்ட இருக்கிறார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படும் மோசடிகள் குறித்து பேசும் இப்படத்தை, தொழில்நுட்ப திரில்லர் ஜானர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகள் குறித்து இதுவரை மக்கள் அறியப்பட்டாத பல்வேறு விஷயங்களை பேசியிருப்பதோடு, அதில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என வழிமுறைகளையும் படத்தின் வழியே கூறியுள்ளாராம் அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன்.

இந்தப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்கள்.. ரோபோ சங்கரும் போலீஸ்காரராக நடித்துள்ளார். இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்குமாம். வரும் மே-1ஆம் தேதி இந்தப்படம் திரைக்கு வருகிறது.