“எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது” ; மெர்சல் எதிர்ப்பாளர்களுக்கு விஷால் பதிலடி..!

vishal 5

விஜய்யின் மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்கச்சொல்லி பிஜேபி கட்சியினர் மிகப்பெரிய ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் விஷால் விஜய் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது ;

“மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது?

சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது.

மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்!