விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’


விஷாலின் அடுத்த படமாக அது நவம்பர் 15ஆம் தேதி ஆக்சன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.. மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் சுந்தர்.சியும் விஷாலும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் ஹைலைட் என்னவென்றால் இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் ஒரு ஆக்சன் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். ட்ரெய்லரை பார்க்கும்போது ரசிகர்களுக்கு இந்த படத்தில் செம ட்ரீட் காத்திருக்கிறது என்பது சொல்லாமலேயே தெரிகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால், ‘என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட படமும் இதுதான்.. நான் அதிகமாக அடிபட்ட படமும் இதுதான்.. ஒரு காட்சியில் நான் சாவின் விளிம்பைத் தொட்டு விட்டு திரும்புவதை என் கண்ணாலேயே பார்த்தேன்.. குறிப்பாக தமன்னாவுடன் இணைந்து எடுக்கப்பட்ட ஒரு பைக் காட்சியில் அவர் பயந்துபோய் என்னை இறுகப் பிடித்துக் கொண்டார்.. அவர் பயத்தைப் போக்கி, சமாதானப்படுத்தி அந்தக் காட்சியில் நடித்து முடித்தோம். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காட்சியை 10 லட்சத்தில் எப்படி எடுக்கலாம், ஒரு லட்சத்தில் எப்படி எடுக்கலாம் என்கிற வித்தையை சுந்தர்.சியிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. அவ்வளவு ஏன் சினிமாவில் இயக்குனராக விரும்பும் ஒவ்வொரு உதவி இயக்குனரும் சுந்தர்.சியிடம் கட்டாயம் ஒரு படமாவது பணியாற்றினால் பல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார்

இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை 90 நாட்களிலேயே எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. இந்தப்படத்தில் விஷாலுக்கு இணையாக சண்டைபோடும் கதாபாத்திரத்தில் அதிரடி வில்லியாக அகன்ஷா பூரி நடித்துள்ளார்.. இவர்கள் தவிர பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சாயாசிங், ராம்கி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லன் யார் என்பதுதான் யாராலும் யூகிக்க முடியாது விஷயமாக இருக்கும்.. க்ளைமாக்ஸில் அட என ஆச்சரியப்பட வைக்கும் எனக்கூறி சஸ்பென்ஸ் வைக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி