“என் பூஜை அறையில் இருக்கும் சாமி தான் லிங்குசாமி”; விஷால் நெகிழ்ச்சி..!

vishal (1)

விஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதை முன்னிட்டு படக்குழுவினருடன் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி , எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய விஷால் என் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சாமியாகத்தான் லிங்குசாமியை பார்க்கிறேன் என நெகிழ்ந்தார். மேலும் அவர் பேசியதாவது,

“சண்டக்கோழி என் திரையுலக வாழ்க்கையையே மாற்றிய படம்.. சொல்லப்போனால் அது எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. கதை பற்றி கேள்விப்பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் என்கிற உரிமையில் அந்த படத்தில் நான் நடிக்கின்றேன் என்று கூறினேன் அப்போது எனது முதல் படமான செல்லமே படம் கூட வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். தாவணி போட்ட தீபாவளி பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது.

தெலுங்கிலும் பந்தயக்கோழி என்று வெளியிட்டார்கள். லிங்குசாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார்

அன்று முதல் 24 படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன். அதுவும் சண்டக்கோழி-2வே எனது 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது. அப்போதும் சரி, இப்போதும் சரி என் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சாமியாகத்தான் லிங்குசாமியை பார்க்கிறேன்..

சண்டக்கோழி-2, பந்தயக்கோழி-2 இரண்டுமே அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது. அதுவும் ஆயுத பூஜை அன்று 2000 பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போல பெரிய அளவில் வெளிவரவுள்ளது”. என்றார் விஷால்