சண்டக்கோழி மூன்றாம் பாகத்துக்கு தயார் லிங்குசாமி – விஷால் அறிவிப்பு

sandakozhi 2

விஷால் நடிப்பில் லிங்குசாமி டைரக்சனில் 2005-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சண்டக்கோழி’,, விஷாலின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இந்தப்படம் அமைந்தது. 13 வருடங்களுக்கு பிறகு லிங்குசாமி-விஷால் கூட்டணியில் இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது ‘சண்டக்கோழி 2’. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண், ஷண்முகராஜன் ஆகியோர் இதிலும் தொடர்கிறார்கள். மற்றும் கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரீஷ் பெராடி, ‘கபாலி’ விஸ்வந்த், ‘அப்பாணி’ சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் அக்-18ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த நிகழ்வில் விஷால், ராஜ்கிரண், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், லிங்குசாமி, கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, “சண்டக்கோழி முதல் பாகத்தின் மரியாதையை இதில் காப்பாற்றி இருக்கிறோம். இந்தப்படத்தில் எல்லாமே சரியாக அமைந்து வந்திருக்கிறது. கதாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் அடுத்ததாக சண்டக்கோழி மூன்றாம் பாகத்திற்கான வேலைகளை துவங்க சொல்லிவிட்டேன். இதுபோல பதினைந்து வருட இடைவெளி எல்லாம் இந்தப்படத்திற்கு எடுத்துக்கொள்ள மாட்டேன். விஷாலை வைத்து அடுத்த படத்தை இயக்கினால் அது சண்டக்கோழி-3 ஆகத்தான் இருக்கும்” என்றார்.

விஷாலும் கதை எப்போது தயாராகிறதோ உடனே சொல்லுங்கள் படத்தை ஆரம்பித்து விடலாம் என்றார்.