சரத்குமாரிடம் மூன்று கேள்விகளுக்கு பதில் கேட்கும் விஷால்..!

நடிகர் சங்க விவகாரங்களில் அதன் தலைவர் சரத்குமாருக்கும், நடிகர் விஷாலுக்கும் தொடர்ந்து அறிக்கை யுத்தம் நடந்துவருவது தெரிந்ததுதான். சமீபத்தில் கூட நடிகர்சங்க உறுப்பினர்களிடம் விஷால் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்தி வருவதாக சரத்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.. ஆனால் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சரத்குமார் தரப்பிடம் மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார் விஷால்.

முதல் கேள்வி. ‘பூச்சி’ முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கினால் கட்டிடம் கட்டலாம் என்று சொல்லப்பட்டது. இந்த வழக்கில் கட்டிடம் கட்டுவது தொடர்பாக, 9 பேருக்கு பதிலாக 2 பேர் கையெழுத்திட்டால் அந்த ‘டீல்’ செல்லாது என்று அந்த சிங்கிள் பெஞ்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு தவறா..?

இரண்டாவது கேள்வி. கடந்த வருடம் நடந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் 2015 பொங்கலுக்குள் வழக்கை உடைத்து கட்டிடம் கட்டாவிட்டால் விஷால் சொல்லும் திட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். பொங்கல் முடிந்து மாதங்கள் பல மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் அதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

என்னை ‘நாய்’ என்று பேசி இழிவுபடுத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே…? குமரிமுத்துவுக்கு மட்டும் தண்டனை என்றால், துணைத்தலைவர் காளைக்கு அந்த சட்டம் பொருந்தாதா…?

இந்த மூன்று கேள்விகளில் உள்ள நியாயமான கருத்துகளை சொல்வது சங்கத்தின் மீது அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக ஆகி விடுமா..? இதற்கு அவர்கள் மனசாட்சி சரியான பதிலை சொல்லட்டும். என்கிறார் விஷால்.