திருட்டு வி.சி.டிக்கு எதிராக காரைக்குடியில் விஷால் அதிரடி..!

ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடர்ந்து நடிபெற்று வருகிறது. இந்த சமயத்தில் அங்கேயுள்ள இரண்டு உள்ளூர் கேபிள் சேனல்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமயலறையில்’ ஆகிய படங்களை திருட்டுத்தனமாக ஒளிபரப்புவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவை இரண்டுமே தனது படங்கள் இல்லை என்றாலும் விஷாலுக்கு திருட்டு விசிடியின் கோர தாண்டவத்தையும் லோக்கல் சேனல்களின் அத்துமீறும் இந்த காட்டு தர்பாரையும் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவே, உடனே காரைக்குடியில் உள்ள காவல்நிலையத்தில் இது குறித்து புகார் செய்த்தார்.

காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட இரண்டு லோக்கல் சேனல்களில் உள்ள சிலரை கைது செய்துள்ளார்கள். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரைக்குடியிலே ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த விஷால் இந்த தகவல்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டதோடு இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் சேனல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவுமாறும் பத்திரிகைகளை கேட்டுக்கொண்டார்.