வி.ஐ.பி-2 ; விமர்சனம்

vip2

மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘வி.ஐ.பி-2’ அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற தீனி போட்டிருக்கிறதா..?

தனக்கு முதல் பாகத்தில் வேலைகொடுத்த முதலாளியின் கம்பெனியிலேயே தனது வேலையை தொடர்கிறார் தனுஷ்.. அதே வீடு, ரிட்டையர்டு ஆன அப்பா சமுத்திரக்கனி, காதல் மனைவியாக அமலாபால், இன்னும் திருமணமாகாத தம்பி, அதே மொபா ஸ்கூட்டர் என எதுவுமே மாறாத தனுஷின் வாழ்க்கையில் அவ்வப்போது, இல்லையில்லை.. அடிக்கடி அவர் குடித்துவிட்டு வருவது மட்டும் தான் புதிய பழக்கம்.

அந்த வருடத்தின் கன்ஸ்ட்ரக்சன் சம்பந்தமான பல விருதுகளும் நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருக்கும் கஜோலின் நிறுவனத்துக்கு கிடைக்க, சிறந்த இன்ஜீனியருக்கான விருது மட்டும் எதிர் கம்பெனியில் வேலைபார்க்கும் தனுஷுக்கு கிடைக்கிறது.. சரி அவரையும் நம் கம்பெனியில் சேருங்கள் என தனுஷையும் பத்தோடு பதினோராவது ஆளாக நினைத்து கஜோல் உத்தரவு போட, நான் புலிக்கு வாலாக இருப்பதை விட, பூனைக்கு தலையாக இருப்பேன் என கெத்து காட்டி கஜோலை அலட்சியப்படுத்துகிறார் தனுஷ்..

போதாக்குறைக்கு கஜோலின் கம்பெனிக்கு செல்லவேண்டிய மிக முக்கியமான பில்டிங் காண்ட்ராக்ட் ஒன்றையும் தனது கம்பெனிக்காக தனுஷ் கைப்பற்ற, தனுஷின் முதலாளிக்கு குடைச்சல் கொடுத்து அவரது வியாபாரத்தை ஆட்டம் காண வைக்கிறார் கஜோல்.

நம்மால் முதலாளிக்கு கஷ்டம் வேண்டாம் என நினைக்கு தனுஷ், வெளியே வந்து வழக்கம்போல வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளை ஒன்றிணைத்து புதிய கம்பெனி தொடங்குகிறார். சும்மாவே ஆடும் கஜோல், இதனால் சலங்கை கட்டிவிட்ட மாதிரி தனுஷின் மீது அடுத்தடுத்த அட்டாக்குகளை ஆரம்பிக்கிறார். இதனை தனுஷ் எப்படி சமாளிக்கிறார், கஜோலுக்கு எப்படி பாடம் புகட்டுகிறார் என்பதுதான் மீதிக்கதை.

முதல் பாகத்தைப்போல இதிலும், சாதாரண ஒரு இன்ஜினியர் சக்தி வாய்ந்த முதலாளி வர்க்கத்துடன் மோதி ஜெயிப்பதுதான் கதை என்றாலும் முதல் பாகத்தில் இருந்த ‘பெப்’ இதில் சற்றே குறைவுதான்.. தனுஷின் நடிப்பில் குறை சொல்ல என்ன இருக்கப்போகிறது..? அவர் பஞ்ச் பேசுவதை ரசிக்க முடிந்த நம்மால், அதற்காகவே அவர் வலுக்கட்டாயமாக சிகரெட் பிடிக்கும் காட்சிகளை சுத்தமாக ஏற்றுகொள்ள முடியவில்லை..

மன்னன் விஜயசாந்தி அளவுக்கு இல்லையென்றாலும் கூட, வேறுவிதமாக கம்பீரமும் மிடுக்கும் காட்டி அசத்துகிறார் கஜோல், தனுஷிடம் காட்டும் அலட்சியம், கோபம், இறுதிக்காட்சிகளில் அவரது மாற்றம் எல்லாமே ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

தனுஷின் மனைவியாக இதில் புரமோஷன் ஆனாலும் அமலாபலின் கேரக்டர் வலிந்து திணிக்கப்பட்டதாக, கதையின் எந்த பகுதியிலும் ஒட்டாத விதமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் பாதியில் ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் தனுஷ்-அமலாபால் லைப்ஸ்டைல் செம போர்..

கடந்த பாகத்தில் தனுஷிடம் கண்டிப்பும் மிடுக்கும் காட்டிய சமுத்திரக்கனி, இதில் தனுஷிடம் நட்பாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனுஷ் அவரை டாமினேட் செய்யும் காட்சிகளில் அவரது கேரக்டரின் மதிப்பு கீழிறங்கவே செய்கிறது.

அம்மா சரண்யாவை, நினைவுக்காட்சிகள் என்கிற கோணத்தில் சாமர்த்தியமாக மீண்டும் உள்ளே கொண்டு வந்துள்ளது பாராட்டத்தக்கது. முதல் பாகத்தில் சரண்யாவால் உயர்பெற்ற பெண்ணாக நடித்த சுரபியை, இந்த பாகத்தில் மாற்றாமல் இருந்தால் இன்னும் முதல் பாகத்துடன் நம்மால் ஒன்ற முடிந்திருக்கும். விவேக்கின் வழக்கமான மைன்ட் வாய்ஸ் காமெடி, கூடவே செண்டிமெண்ட் ஆகியவை கொஞ்சம் எடுபடுகின்றன. அட.. கஜோலின் செக்ரட்டரியாக பிக் பாஸ் ரைசாவா அது..?

அனிருத் மிஸ்ஸிங் ஆனதன் தாக்கம் பாடல்களில் நன்றாகவே தெரிகிறது. ஒரு படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்கும்போது, ரசிகர்கள் எதற்கெடுத்தாலும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டுத்தான் படத்தை பார்க்க முயல்வார்கள்.. அதற்கேட்ட மாதிரி பல விஷயங்களை அப்படியே மாற்றாமல் இந்தப்படத்தை இயக்கியுள்ள சௌந்தர்யாவை பாராட்டலாம்.

ஆனால் முதல் பாகத்தில் இருந்த சவால்களின் வீரியமும், அதை தனுஷ் எதிர்கொண்ட திறனும் இதில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது சௌந்தர்யா அமைத்த திரைக்கதையின் பலவீனம்… முதல் பாகத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இந்தப்படத்தை பார்த்தாலும் கூட இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடுத்திருக்கலாமே என்றுதான் சொல்ல தோன்றுகிறது.