வேலையில்லா பட்டதாரி – விமர்சனம்


இன்ஜீனியரிங் படித்துவிட்டு அதிக சம்பளம் வந்தாலும் வேறு வேலைக்கு போகாமல் படித்த படிப்புக்கு ஏற்றமாதிரி கட்டுமான வேலைக்காக காத்திருக்கிறார் தனுஷ்.. அவரது தம்பி கை நிறைய சம்பாதிக்கிறார்.. தனுஷோ தண்டச்சோறாக இருக்க, தந்தை சமுத்திரகனியிடம் திட்டு வாங்குவது அவரது அன்றாட வேலை..

சூழல் மாறுகிறது. தனுஷுக்கு கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கிறது. கொஞ்ச நாளில் அரசின் இலவச வீடு கட்டும் புராஜெக்ட்டும் இவரை தேடி வருகிறது. அந்த புராஜெக்ட் கிடைக்காத எதிரிகளின் தொந்தரவும் கூடவே வருகிறது. இதனை சமாளித்து எப்படி தனுஷ் புராஜெக்ட்டை வெற்றிகரமாக முடிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்…

ராஞ்சனா, மரியான் என தனது திருப்திக்காக கொஞ்ச நாட்கள் நடித்த தனுஷ், மீண்டும் ரசிகர்களுக்கென்று தனது வழக்கமான பாணிக்கு திரும்பியிருக்கிறார். அம்மாவிடம் விளக்குமாற்றால் அடி வாங்குவது, அப்பாவிடம் திட்டு வாங்குவது, அருங்காட்சியகத்தில் இடம்பிடிக்கவேண்டிய பழைய மொபெட்டில் சுற்றுவது என இடைவேளை வரை ஜாலி தனுஷ்.. அதற்குப்பின் வேலை, எதிரிகள் என சீரியஸாக கமர்ஷியல் பாதையில் ஏறினாலும் அதிலும் ரசிகர்களுக்கு முழு சாப்பாடு போட்டுவிடுகிறார். க்ளைமாக்ஸ் பைட்டில் சிக்ஸ் பேக் காட்டும்போது அட..அடடா.. அள்ளுகிறார் தனுஷ்..

இதுவரை நடித்த படங்களில் இந்தப்படத்தில் அமலாபால் சூப்பர்.. பாந்தமான அழகிலும் நடிப்பிலும்.. தனுஷுக்கும் அவருக்குமான காதல் கூட இயல்பாக இருப்பது அமலாபாலின் கேரக்டருக்கு பலம் சேர்க்கிறது. அதேபோல கொஞ்ச நேரமே வந்தாலும் செலக்டிவான சுரபியின் கேரக்டரும் நம் மனதை கவர்கிறது.

இடைவேளைக்குப்பின் வந்தாலும் தனுஷின் டீமில் சரியாக செட்டாகியிருக்கிறார் விவேக்.. தனுஷ் தூங்கும் டெண்ட்டை பார்த்துவிட்டு பெரிய கேரிபேக்குல படுத்து தூங்குற போல” என தனுஷை கலாய்ப்பது குபீர் சிரிப்பு ரகம்..

சரண்யா பொன்வண்ணன், வழக்கமான பாசக்கார அம்மா.. ஆனால் பாதியிலேயே நம் மனதை கனக்க வைத்துவிடுகிறார். சமுத்திரகனி புதுவிதமான அப்பா கேரக்டரில் மிடுக்காக இருக்கிறார். தனுஷின் அம்மாஞ்சி தம்பியாக நடித்திருக்கும் ரிஷியும் சரியான தேர்வுதான்.
இளம் வில்லனாக நடித்திருக்கும் புதுமுகம் அமிதேஷ், மெச்சூரிட்டி இல்லாத அமெச்சூர் வில்லத்தனத்துக்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.. அதிலும் க்ளைமாக்ஸில் தனுஷுடன் மொபெட்டில் போவது சூப்பர் காமெடி.. இனி இவரை தேடி வாய்ப்புகள் வரும்…

அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட் என்பதால் அவரை நாம் மறுபடியும் புகழவேண்டிய தேவையில்லை.. தனுஷின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அனுபவத்தில் அவருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து அதில் காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என சரிவிகிதத்தில் கலந்துகொடுத்து தன்னை வெற்றிகரமான இயக்குனராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் வேல்ராஜ்.

மக்கள் உயிருடன் விளையாடும் கட்டுமான நிறுவனங்களுக்கும் மோசமான இன்ஜீனியர்களுக்கும் சவுக்கடி கொடுக்கும் விதமாக, குறிப்பாக சமீபத்தில் போரூர் அருகே நடந்த அடுக்குமாடி விபத்தை நினைவூட்டும் விதமாக, அந்த விபத்து நடந்த காலத்துக்கு முன்பே காட்சிகளை அமைத்திருப்பதில் அவரது தொலை நோக்கும் சமூக அக்கறையும் தெரிகிறது.