விஞ்ஞானி – விமர்சனம்

நாட்டின் மிக அத்தியாவசிய தொழிலான விவசாயத்தையும் குறிப்பாக நெல் உற்பத்தியை பெருக்குவதை பற்றியும் விஞ்ஞான ரீதியாக சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் விஞ்ஞானி’.

சங்ககாலத்தில் தொல்காப்பியர் கண்டுபிடித்த ‘தாகம் தீர்த்தான்’ எனும் நெல்லில் கொஞ்சம் மண்ணிற்குள் புதைத்து வைப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார் கிராமத்தில் ஆசிரியையாக இருக்கும் மீரா ஜாஸ்மின். அதை விஞ்ஞானத்தின் உதவியால் பெருக வைத்தால் மக்களின் பசியும் தாகமும் தீருமே என நினைக்கும் மீரா அதற்கேற்ற ஒரு விஞ்ஞானியை தேடுகிறார்.

தனது அப்பாவின் நண்பர் மகனான தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானியான பார்த்தியை பற்றி தெரிந்துகொண்டு அவர் மூலம் இதை நிறைவேற்ற முயற்சி எடுக்கிறார்., அதன் ஒரு பகுதியாக பார்த்தியை திருமணம் செய்தும் கொள்கிறார். ஆனால் இந்த நெல்லின் மீது நம்பிக்கை இல்லாத பார்த்தி நெல்லையும் மீராவையும் உதாசீனப்படுத்தி தானே ஒரு புதுரக நெல்லை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஆனால் தாகம் தீர்த்தான் நெல் பற்றி அறிந்த பார்த்தியின் எதிரிகள் அதை களவாடி, அதன் மூல லாபம் பார்க்க நினைக்கின்றனர். இந்த நிலையில் விஞ்ஞானியின் உதவிக்கு இருக்கும் பெண் கொல்லப்பட, பழி மீராவின் தலையில் விழுகிறது. இறுதியில் நெல்லின் உண்மைத்தன்மையையும் தனது மனைவி குற்றம் செய்யாததையும் உணரும் பார்த்தி எதிரிகளை அழித்து, நெல்லை எப்படி கைப்பற்றுகிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்..!

புதுமுகம் பார்த்தி அவரே நடித்து, படத்தையும் இயக்கியுள்ளார்.. அவரது கதாபாத்திரத்தையே முரண்பாடாக சித்தரித்துள்ளதும் அதற்கு அவர் நடிப்பு பொருந்தாமல் தனித்து நிற்பதும் மைனஸ்.. நீண்ட நாட்களுக்கு பிறகு மீரா ஜாஸ்மின். முன்பு பார்த்த அதே அழகுடன்.. ஆனால் கண்ணியமாக சித்தரிக்கப்படும் அவர் கதாபாத்திரம் அடுத்து பார்த்தியை திருமணம் செய்ய அவர் நடத்தும் கூத்துக்களால் சிதைந்து விடுகிறது.

காதலிக்க திட்டம் போட்டு தரும் விவேக், கூட மாட உதவி செய்யும் அவரது மனைவி தேவதர்ஷினி, இதுபோதாதென்று மீராவின் அப்பா தலைவாசல் விஜய்யும் அவர் அம்மா ஸ்ரீநந்தினியும் இந்த கூத்தில் சேர்ந்துகொள்வது தன கொடுமை.. தொல்காப்பியராக கொஞ்ச நேரமே வரும் போஸ் வெங்கட்டின் நடிப்பு ஆறுதல் தருகிறது.

தொல்காப்பியர் இலக்கியம், தாகம் தீர்த்தான் நெல் என சங்க இலக்கியங்களை விஞ்ஞானத்துடன் தொடர்புபடுத்தி ஆரம்பத்தில் சுவராஸ்யம் ஏற்படுத்துவது என்னவோ உண்மை தான். பார்த்திக்கு உதவியாக கதை திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்திருக்கும் வித்யாதரன் விஞ்ஞான ஜாலம் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் இடையில் குடும்பத்திற்குள் நிகழும் கல்யாண கலாட்டாக்கள் என தேவையில்லாமல் படம் தடம் மாறுவதால் சுவராஸ்யம் குறைந்து ‘சப்’பென்று ஆகிறது.