வில்லாளி வீரன் – விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள் : திலீப், நமீதா பிரமோத், மைதிலி, கலாபவன் சாஜன், சாய்குமார், ரியாஸ்கான், பாபு ஆண்டனி, லாலு அலெக்ஸ், சித்திக், நெடுமுடி வேணு, சீதா, வினய்பிரசாத்,

திரைக்கதை : தினேஷ் பள்ளத்து

படத்தொகுப்பு : ஜெய்ஷங்கர்

ஒளிப்பதிவு : அனில் நாயர்

இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்

இயக்கம் : சுதீஷ் சங்கர்

மார்க்கெட்டில் காய்கறிக்கடை நடத்திக்கொண்டு மீதி நேரங்களில் அளவான பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார் திலீப். இவரது தந்தை சித்திக் செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்க, தாயுடன் வசிக்கும் திலீப், தங்களோடு சேர்த்து ஆதரவற்ற நான்கு குடும்பங்களின் செலவுகளையும் கவனித்து வருகிறார்..

இந்த சூழ்நிலையில் அதில் ஒரு குடும்பத்தில் உள்ள பெண்ணின் ஓரி படிப்புக்காக 25ஆயிரம் ரூபாய் தேவைப்பட, திருமண புரோக்கர் நெடுமுடி வேணுவின் ஏற்பாட்டின்படி நமீதா பிரமோத்தை பெண்பார்க்க செல்கிறார். ஆனால் அவர் பணத்துக்காகத்தான் மாப்பிள்ளையாக நடிக்க வந்தார் என தெரியவர, அவரை போலீசில் பிடிதுக்கொடுக்கிறார் நமீதாவின் தந்தை லாலு அலெக்ஸ்..

ஆனால் போலீசிடம் இருந்து திரும்பிய திலீப் ஓரிடத்தில் யாராலோ தாக்கப்பட்டு சுயநினைவின்றி விழுந்து கிடக்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு லாலு அலெக்சை சந்தித்து நியாயம் கேட்கப்போகிறார் சீதா. திலீப்பை தான் ஆள்வைத்து அடிக்கவில்லை என சொல்கிறார் லாலு அலெக்ஸ்.

அதேசமயம் சீதா மூலமாக திலீப் மிகப்பெரிய கோடீஸ்வரன் என்பதும் வெளிநாட்டில் படித்த அவர், மைதிலியை காதலித்ததும், கேரளா வரும்போது அவரது தந்தை வீண்பழி சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டதும், சொத்துக்களை எல்லாம் எதிரிகள் தந்திரமாக கைப்பற்றிக்கொண்டதும், அதன் காரணமாகவே திலீப்பின் காதலி மைதிலி அவரை விட்டு விலகியதும், தற்போது தனது தந்தையின் ஹோட்டல் பாரில் விற்கப்பட்ட போலி மதுபானத்தால் உயிரிழந்ததாக சொல்லப்படும் நான்கு பேரின் ஆதரவற்ற குடும்பத்தினரை தங்களுக்கு சொந்தமான வீட்டில் வைத்து பராமரித்து வருவதும் என பல விபரங்கள் தெரிய வருகின்றன.

இந்நிலையில் ஜெயிலில் இருந்து ரிலீஸாகும் திலீப்பின் தந்தை சித்திக், திலீப் மற்றும் தன மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்ல முயல்கிறார். ஆனால் இதுவரை திலீப்பால் ஆதரிக்கப்பட்டு வந்தவர்கள் அவரை துரோகி என முத்திரை குத்தி ஒதுக்குகிறார்கள்.

அப்போதுதான் தன் தந்தை ஜெயிலில் இருந்து வெளிவந்த உடனே அவரது எதிரிகள் அவரை மிரட்டியதும், தன்னை ஏற்கனவே தாக்கியதும் கூட அவர்கள் தான் என்பதும் தெரிய வருகிறது. அவர்கலை பழிவாங்க கிளம்பிய சூழலில் தான் திலீப்பையும் அவரது தந்தையையும் எதிரிகள் கடத்த, அந்த போராட்டத்தில் திலீப்பின் தந்தை இறக்கிறார். வெகுண்டெழுந்த திலீப் தனது எதிரிகளை புத்திசாலித்தனமாக பழிவாங்க கிளம்புகிறார்.

ஜனப்ரிய நாயகன் என்று சொல்லப்படும் திலீப்புக்கு ஏற்ற கதை தான்.. காமெடி, கோபம், செண்டிமெண்ட், காதல் என ஆல் ஏரியாவிலும் அடித்து விளையாடுகிறார் திலீப்.. இன்றுவரை அனைத்து கமர்ஷியல் படங்களிலும் கொஞ்சம் சீரியஸ்நெஸ் குறைவான ஆளாகவே தனது கேரக்டர் உருவாக்கப்படுவதை தவிர்த்து 1௦௦00 சதவீதம் சீரியஸானவராக திலீப் ஒரு படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்.

நமீதா பிரமோத்.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ஒரு புதுவிதமான அழகுடன் மிளிர்கிறார்.. அவரது சிரிப்பு அவருக்கு ப்ளஸ்.. நமக்கு போனஸ்.. பணம் போனதும் காதலனை விட்டு ஒதுங்கும் வில்லத்தனமான கதாபாத்திரம் மைதிலிக்கு. க்ளைமாக்ஸில் திலீப்பை அழைத்துச்சென்று அவரது எதிரியான தன் கணவனிடம் மாட்டிவிடும்போது வில்லத்தனத்தில் ஜொலித்தாலும் தன கணவன் கையாலேயே சுடப்பட்டு சாகும்போது பரிதாபம் ஏற்படுத்துகிறார்.

காமெடிக்கு கலாபவன் சாஜன்.. ஏற்கனவே ரிங் மாஸ்டர் படத்தில் திலீப்புடன் இணைந்து அதகளம் பண்ணியவர் இதிலும் அதை தொடர்கிறார். குறிப்பாக தனது கடையில் காய்கறி வாங்க வரும் பெண்ணுக்கு 20 ரூபாய்க்கு காய்கறிகளை அள்ளிக்கொடுத்து கடைசியில் பல்பு வாங்கும் காட்சிகள் செம கலாட்டா..

இசை நம்ம எஸ்.ஏ.ராஜ்குமார். ஆங்காங்கே ‘லாலாலா’க்களும் உண்டு.. பாடல்கள் இல்லாமலோ, அல்லது குறைவான பாடலகளைக்கொண்டோ படம் எடுத்துவந்த கேரளத்துக்காரர்கள், இப்போது நாலு பைட், அஞ்சு பாட்டு என்கிற தமிழ்சினிமா கலாச்சரத்திருக்கு மாறிவருகின்றனர். அதற்கு இந்தப்படமும் விதிவிலக்கல்ல..

சீதா, வினய்பிரசாத், ரியாஸ்கான், அம்மு என தமிழுக்கு தெரிந்த முகங்கள் நிறைய இருப்பதால் தமிழ்ப்படம் பார்க்கும் உணர்வுதான் ஏற்படுகிறது. செண்டிமெண்ட், காதல், காமெடி எல்லாம் கலந்த, திலீப்பிற்கு ஏற்ற கதையை தேர்ந்தேடுத்திருப்பதிலேயே பாதி வெற்றிக்கோட்டை தாண்டிவிட்டார் இயக்குனர் சுதீஷ் சங்கர்.. படமாக்கிய விதத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்