விலாசம் – விமர்சனம்

ரவுடி ஒருவன் தன்னை இந்த வாழ்க்கைக்குள் தள்ளிய, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவனாக மாற்றிய, தன்னை அனாதையாய் விட்டுச்சென்ற தனது பெற்றோரை தேடுவதன் மூலம் தனது விலாசத்தை கண்டுபிடிப்பதுதான் கதை..

இதுவரை ரவுடியாக, அடியாளாக நாம் பார்த்து வந்த பவன் இதில் கதாநாயகனாக புரமோஷன் ஆகியிருக்கிறார். யாரையும் மதிக்காதது, கதாநாயகிக்கு உதவுவது, அம்மா சென்டிமென்ட்டில் அலைபாய்வது என ரவுடியின் இலக்கணங்களுக்கு ஓரளவு சரியாகவே பொருந்துகிறார். கதாநாயகனாக ஓஹோவென்று இல்லை.. அதேசமயம் அவரது முகமும் நடிப்பும் நம்மை உறுத்தவும் இல்லை.

ரவுடியை காதலித்து, அவனை திருத்தி புதிய பாதையில் பயணிக்கவைக்கும் ஆயிரத்து ஒன்றாவது கதாநாயகியாக சனம் ஷெட்டி கொஞ்சம் கொஞ்சம் கவர்கிறார்.. அராஜக போலீஸா இல்லை ரவுடியா எதுவானாலும் அருள்தாஸுக்கு அம்சமாய் செட்டாகிறது. இதில் நம்பிக்கை துரோகம் செய்யும் தாதாவாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

அட முழு நீள நண்பன் கதாபாத்திரத்தில் சூப்பர் குட் லட்சுமண்.. குணச்சித்திரத்தில் மிளிர்கிறார். போலீஸ் அதிகாரியாக வந்து, ஹீரோ திருந்த சான்ஸ் கொடுத்து, இம்மி பிசகாமல் வழக்கம் போல நல்ல போலீஸாக வருகிறார் ஆடுகளம் நரேன்..

ரவிராகவ் இசையில் எண்பதுகளில் வந்தமாதிரியான ‘சிலுக்கு சுந்தரியே’ பாடல் செம ரவுசு.. ரவுடி, காதல், கடைசியில் ரவுடி திருந்துவது என வழக்கமான கதையில் பயணித்தாலும் இடைவேளைக்குப்பின் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன் பெற்றோரை ஒரு ரவுடி தேடுவது போல கொஞ்சம் மாற்றி சிந்தித்திருக்கும் இயக்குனர் கணேசனை பாராட்டலாம்.