விளையாட்டு ஆரம்பம் – விமர்சனம்

vilaaiyattu aarambam review 1

மல்டி லெவல் மார்க்கெட்டிங்கை மையப்படுத்தியோ, அதை நியாயப்படுத்தியோ ஒரு முழுநீள திரைப்படம் இதுவரை வந்ததில்லை.. அந்தக்குறையை போக்கும் விதமாக வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘விளையாட்டு ஆரம்பம்’.

யுவன் மற்றும் நண்பர்களுக்கு அவர்களது ஐடி நிறுவன வேலை ஒருநாள் பறிபோகிறது.. அவர்களை மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட தூண்டுகிறார் யுவனின் காதலியும் அரசியல்வாதியின் மகளுமான ஸ்ராவியா.. ஸ்ராவியாவின் போலீஸ்கார அண்ணன் ரியாஸ்கான் இவர்கள் காதல் பிடிக்காமல், யுவனின் விறைப்பும் முறைப்பும் பிடிக்காமல் யுவனை போட்டுத்தள்ள திட்டம் தீட்டுகிறார்.

காதலியின் தந்தை, அண்ணன் இவர்களுக்கு சவால் விடும் விதமாக யுவனால் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் சாதிக்க முடிந்ததா..? காதலியை கைப்பிடிக்க முடிந்ததா அதுவரை யுவனை வில்லன் ரியாஸ்கான் விட்டுவைத்தாரா என்பது மீதிக்கதை.

நாயகனாக யுவன் (அஜ்மல்கான் என டைட்டிலில் போடுகிறார்கள்) எந்நேரமும் ஆக்ரோஷமாக திரியும் அவர் தனது தந்தையிடும் பாசமாக பேசும் காட்சிகளில் புது ஆளாக பக்குவப்பட்ட நடிப்பை வழங்குகிறார்.. ரியாஸ்கானிடம் அவர் தொடர்ந்து முறைக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் கூட அந்த வேலையை யுவன் செவ்வனே செய்திருக்கிறார்.

சும்மா வந்தோம்.. காதலித்தோம் என்றில்லாமல் நாயகனையும் அவனது நண்பர்களையும் ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கேரக்டரில் ஸ்ராவியா சரியாக பொருந்தி இருக்கிறார்.. கெட்ட போலீஸ் கேரக்டர்.. ரியாஸ்கானுக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்.. கடைசி வரை வீடுகட்டி விளையாடி இருக்கிறார் மனிதர். யுவனின் நண்பர்கள் கேங்கும் படத்தை நகர்த்த உதவுகிறார்கள்.. கொஞ்ச நேரமே வரும் பானுசந்தர், பெரோஸ்கான் இருவரும் தங்களின் கவன ஈர்ப்பை பதிவுசெய்து விட்டு போகிறார்கள்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மிக மிக நல்ல விஷயம்… அதை சரியாக பயன்படுத்தினால்… என்பதை சொல்வதற்காகவே ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது… பல இடங்களில் வசனங்களால் அதை அழுத்தமாக பதிவுசெய்யவும் முயன்றிருக்கிறார்கள் விஜய் ஆர்.ஆனந்த் மற்றும் ஏ.ஆர்.சூரியன் என்கிற இரட்டை இயக்குனர்கள்..

நீதிமன்ற காட்சிகள் எல்லாம் பழைய விஜயகாந்த் படம் பார்ப்பதுபோல இருக்கிறது. மல்டி லெவல் மார்க்கெட்டிங் நல்ல விஷயம் என வலியுறுத்தி சொல்பவர்கள் அது என் நல்லது..? எப்படி அதில் அளவுக்கு அதிகமான தொகை சம்பாதிக்க முடிகிறது என்கிற இன்னொரு பக்கத்தையும் விளக்கமாக சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.