வில் அம்பு – விமர்சனம்

vil ambu 1(1)
சாலையில் ரெட் சிக்னலையும் மீறி, ஒருவன் தவறாக வண்டி ஓட்டிச் செல்கிறான். சரியான முறையில் வரும் இன்னொரு நபர் இதை எதிர்பாராமல், அவன் மீது மோதாமல் இருக்க தனது வாகனத்தை திருப்ப, அது இன்னொரு திசையில் சரியாக பயணிக்கும் இன்னொருவரின் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினால் இதில் யார் குற்றவாளி..? இப்படி யாரோ ஒருவர் போகிறபோக்கில் செய்யும் ஒரு செயல், இன்னொருத்தருக்கு எப்படி பாதகமாக மாறுகிறது என்பது தான் இந்த ‘வில் அம்பு’ படம் சொல்லவரும் கருத்து..

படத்தின் நாயகர்களில் ஒருவரான ஸ்ரீயினால் மேற்கூறிய விதமாக இன்னொரு நாயகனான ஹரிஷ் கல்யாணின் குடும்பத்திலும், வேலையிலும், காதலிலும் எப்படி சிக்கல் ஏற்பட்டு அவரை போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்து செல்கிறது என்பதையும், அதேபோல ஒருகட்டத்தில் ஹரிஷ் கல்யாண் அறியாமல் செய்யும் செயல் ஸ்ரீக்கும் எப்படி சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதையும் படம் முழுவதும் காட்சிக்கு காட்சி மாலையாக தொடுத்து தோரணம் கட்டியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் சுப்ரமண்யம்..

தான் விரும்பியதை படிக்க முடியாத, விரும்பிய வேலைக்கு போகமுடியாமல் அப்பாவுக்கு அடங்கி நடக்கும் தவிப்பை அச்சுப்பிசகாமல் வெளிப்படுத்தி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.. ‘ஓநாய்’ புகழ் ஸ்ரீக்கு இது முக்கியமான படம்.. அதை கவனித்து செய்திருக்கிறார்.. நாயகி சிருஷ்டி கன்னக்குழி விழ சிரிப்பதுடன் தனது வேலையை முடித்துக்கொள்கிறார்.. விடலை பருவத்திற்கே உரிய பருவ குறும்புகளை சரியாக வெளிப்படுத்திகிறார் இன்னொரு நாயகி சம்ஸ்க்ருதி ஷெனாய். இவர்கள் இருவரையும் தனது இயல்பான நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் சாந்தினி.

தன்னால் முடிந்த அளவு படம் முழுவதும் கலகலப்புக்கு உத்தரவாதம் தந்துள்ள யோகிபாபுவை இனி முழு நேர காமெடியனாக பயன்படுத்திக்கொள்ளலாம். போஸ்டர் நந்தகுமார், ஹரீஷ் உத்தமன், ‘ஸ்கெட்ச்’ ராமச்சந்திரன் என மற்ற பாத்திரங்களும் கதைக்கு துணை நிற்கின்றன..

படத்தின் சில காட்சிகள் மீண்டும் ‘விசாரணை’ படம் பார்ப்பதை நினைவூட்டுகின்றன. இரண்டு நாயகர்கள் அருகருகே உள்ள பகுதிகளில் வசித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் பார்க்காமல் இருப்பது என்பது புதுமையான விஷயம் தான் என்றாலும் லாஜிக் இடிக்கிறது. அதேபோல கதையில் வரும் நல்ல கதாபாத்திரங்களுக்கு உதவி செய்வதற்காக கிளைமாக்ஸை தனக்கு வசதியாக இயக்குனர் மாற்றிக்கொண்டு விட்டாரோ என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.. இருந்தாலும் கூட இந்த

வில் அம்பு – விறுவிறுப்பான ஒரு படம் தான்.