விக்ரமாதித்யன் – விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள் : துல்கர் சல்மான், உன்னி முகுந்தன், அனூப் மேனன், நிவின் பாலி (சிறப்பு தோற்றம்), நமீதா பிரமோத், லேனா, சார்மிளா, ஜாய் மேத்யூ மற்றும் பலர்..

படத்தொகுப்பு : ரஞ்சன் ஆப்ரஹாம்

இசை : பிஜி பால்

ஒளிப்பதிவு : ஜோமோன் டி.ஜான்

கதை : இக்பால் குட்டிப்புரம்

இயக்கம் & தயாரிப்பு : லால் ஜோஸ்

கதைச்சுருக்கம் : லேனாவும் அனூப் மேனனும் காவல்துறையில் ஒன்றாக  பணிபுரிகிறார்கள். அனூப் மேனன் லேனாவை திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால்  லேனா வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் அவரோ தன்னை போலீஸ் என்று சொல்லிக்கொண்டு லேனாவை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளும் திருடன்.. இதனால் விரக்தியடையும் அனூப் மேனன் சில நாட்களிலேயே சார்மிளாவை திருமணம் செய்துகொள்கிறார்.

லேனாவுக்கும் சார்மிளாவுக்கும் ஒரே நாளில் ஆண் குழந்தை பிறக்கின்றது. இதில் லேனாவின் மகன் தான் ஆதித்யா(துல்கர் சல்மான்).. அனூப் மேனனின் மகன் விகரமன் (உன்னி முகுந்தன்). தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் துல்கரின் தந்தை மீது அனூப் மேனனுக்கு எப்போதும் ஒரு கோபம் இருக்கிறது. அதற்கேற்றார்போல அவர் ஒரு திருட்டு வழக்கில் சிக்க, அவரை பள்ளிச்சிறுவனான அவரது மகன் துல்கர் பார்க்கும் விதமாக அடித்து தெருவில் இழுத்துப்போகிறார் அனூப் மேனன்..

தன் தந்தை போலீஸ் என தனது சக மாணவர்களிடம் சொல்லிவந்த சிறுவன் துல்கருக்கு இது அதிர்ச்சியை தருகிறது. அதனால் அவன் தனது தந்தையிடம் நெருங்க மறுக்கிறான். கூடவே லேனாவும் தனது கணவரை திட்ட, அந்த அவமானத்தில் துல்கரின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். நிற்க.. இது பெரியவர்களின் பிளாஸ்பேக்..

சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போதிருந்தே துல்கருக்கும் உன்னி முகுந்தனுக்கும் ஏழாம் பொருத்தம்.. கூடவே இவர்கள் இருவருக்கும் சிறு வயதில் இருந்தே  தோழியாக வரும் நமீதா பிரமோத் மீது, நட்பு பாராட்டுவதில் அதிக உரிமை யாருக்கு என்கிற பொசஸிவ்னெஸ்ஸும் சேர்ந்துகொள்கிறது. இதனால் வளர்ந்து வாலிபர்களான பின்னும் கீரியும் பாம்புமாக இருக்கிறார்கள். இருவரிடமும் சம நட்புடன் பழகினாலும் கொஞ்சம் கொஞ்சமாக துல்கரிடம் காதலில் விழுகிறார் நமீதா…

உன்னி ஆரம்பத்தில் இருந்தே உடற்பயிற்சி செய்து உடம்பை பிட்டாக வைத்திருக்கிறார்.. அவருடைய தந்தையின் ஆசைப்படி போலீஸ் தேர்வுக்கு தன்னை படிப்படியாக தயார்படுத்துகிறார்..  ஆனால் துல்கரோ ஆரம்பத்தில் சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். ஆனால் அவரை பாதைமாற்றி அவரையும் போலீஸ் வேலைக்கு தயார் செய்கிறார் துல்கரின் நலம் விரும்பியும், அனூப் மேனனின் கீழ் வேலைபார்க்கும் போலீஸ்காரருமான ஒருவர்.

தன மகன் உன்னியை விட, அதிக அளவு துல்கரை எதிரியாக பாவிக்கின்ற, தன்னை விட்டுவிட்டு இன்னொருவனை மணந்த லேனாவின் மேல் மனதளவில் பொருமலுடன் இருக்கின்ற அனூப் மேனனுக்கு இது பொறுக்குமா…? பிட்னெஸ் தேர்வில் வெற்றிபெற்ற துல்கர் மீது போதைப்பொருள் கடத்தல் கேஸ் போட்டு அவரை உள்ளே தள்ளுகிறார்..

ஆனால் அது பலிக்காமல் துல்கர் விடுதலையாக, அதை வைத்தே தன்னிடம் மகனுக்காக உதவி கேட்டு வரும் துல்கரின் தாய் லேனா மூலமாக அவரது மகன் விடுதலைக்கு தான் தான் காரணம் என சாதுர்யமாக காய் நகர்த்தி அதற்கு பிராயச்சித்தமாக லேனா மூலமாகவே துல்கரை நேர்முக தேர்வில் கலந்துகொள்ள முடியாமல் செய்கிறார்…

தான் நேர்முக தேர்வில் கலந்துகொள்ளாமல் போனதின் பின்னணியில்அனூப் மேனனின் தந்திரத்திற்கு சிக்கி, ஒருவகையில் தன் தாயும் உடந்தையாக இருந்ததை கண்ட துல்கர் மனம் வெறுத்து ஊரைவிட்டு எங்கேயோ கிளம்பி போய்விடுகிறார்… அவரை காணாமல் ஏங்கும் அவரது காதலி நமீதா பிரமோத்துக்கும் துல்கர் வருவார் என்கிற நம்பிக்கை போய்விட, ஒருகட்டத்தில் தன்னை இன்னொருபக்கம் விரும்புகின்ற உன்னிக்கு சம்மதம் சொல்லும் நிலைக்கு வருகிறார்..

சரியாக அன்றைய தினம், அதாவது உன்னி முகுந்தன் எஸ்.ஐ ஆக பதவி ஏற்க இருக்கும் முதல் நாள், காணாமல் போன துல்கர் சபரிமலைக்கு சென்றுவந்த கோலத்தில் திரும்புகிறார்…  மறுநாள் உன்னி பதவி ஏற்கும் விழா மற்றும் அவரது தந்தை அனூப் மேனன் ஓய்வு பெறும் நாள்..

உன்னியை வாழ்த்த தன் தாயுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார் துல்கர்.. ஆனால் வாழ்த்த வந்த துல்கரை அனூப் மேனன் தனது ஸ்டேசனுக்கு விசிட் வந்திருக்கும் புதிய கலெக்டரான நிவின் பாலி முன்பாக அவமானப்படுத்துகிறார்..

ஆனால் நிவின் பாலி மூலமாக துல்கர் தற்போது யார் என்கிற உண்மை தெரியவர அதிர்ச்சியடைகிறார் அனூப் மேனன். முடிவில் துல்கருக்கு தலைவணங்கும் நிலை அவருக்கு ஏற்பட, உன்னி தங்களது தோழியை, துல்கரிடமே ஒப்படைக்க முடிவு சுபமோ சுபம்..

இரண்டு முன்னணி ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள்… ஆனால் இது முழு ஆக்ஷன் படம் இல்லை.. அப்படியானால் லவ் ரொமாண்டிக் படமா..? அதுவும் இல்லை.. இருவரும் போலீஸ் ஆக முயற்சி செய்கிறார்கள் என்பதால் போலீஸ் ஸ்டோரியா..ம்ஹூம்.. இந்த வரையறைகள் எதிலும் சிக்காத ஒரு படம் தான் ‘விக்ரமாதித்யன்’.

நீங்கள் தியேட்டருக்குள் நுழைந்து சீட்டில் உட்கார்ந்தால் போதும், அதன்பின் பாடல் காட்சியில் கூட உங்களை தம்மடிக்க எழுந்துபோக விடமாட்டார் துல்கர் சல்மான். அதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி.. புன்னகை, ஆக்ஷன் இரண்டையும் சரியான விகிதத்தில் வெளிப்படுத்தக்கூடிய வரம் வாங்கி வந்துள்ள வசீகர வதனம் அவருடையது.. (அப்ப்பா.. எத்தனை ‘வ’..?)

உன்னியுடன் எதிரியாக அல்லாமல் தனது எதிராளியாக நினைத்து துல்கர் நடத்தும் கூத்துக்கள் அனைத்தும் வரிசை எண்கள் போட்டு குறித்துக்கொள்ள வேண்டிய அக்மார்க் காமெடிகள்.. உன்னி முகுந்தனும் அதற்கு ஈடுகொடுத்திருப்பது துல்கரின் கேரக்டருக்கு பலம் சேர்க்கிறது. கல்லூரியில் பாஸானபோதும் சரி.. போலீஸ் வேலைக்கு அப்ளிகேசன் போடும்போதும் சரி துல்கர் போடும் குத்தாட்டம் இருக்கிறதே… அட..அட..

இவருக்கு சரிக்கு சமமான கேரக்டரை உன்னி முகுந்தனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் வேலைக்கு தயாராகும் இளைஞன் எப்படி இருப்பான் என்றால் தாரளமாக உன்னியை உதாரணம் காட்டலாம். சிறுவயதில் இருந்தே துல்கரை டீஸ் செய்துவரும் தனது கேரக்டரை கடைசிவரை பிசகாமல் வெளிப்படுத்துகிறார். துல்கரும் உன்னியும் மோதும் ஒரு சண்டைக்காட்சி பிரமாதம்..

காய்ச்சல் வந்து கடைசி நேரத்தில் போலீஸ் எழுத்து தேர்வுக்கு போகமுடியாமல் வீட்டில் படுத்திருக்கும் உன்னியை வீடு தேடிவந்து தூக்கிப்போய் எக்ஸாம் ஹாலில் உட்காரவைக்கும் துல்கர், அவரிடம் “நீ தேர்வு எழுதலைன்னா நான் யார்கூடடா போட்டிபோட்டு ஜெயிக்கிறது?” என்று கூறும் இடம் அப்ளாஸ்..

ஆனால் தனது தந்தை துல்கர் மீது பழிபோட முயற்சிக்கும்போது அதில் இருந்து துல்கரை காப்பாற்றிவிட்டு “என்கூட மோதுறதுக்கு நீ இல்லைன்னா நான் எப்படிடா போட்டியில கலந்துக்க முடியும்?” என உன்னி அதை துல்கருக்கு எதிரான சவடாலாக மாற்றுவது இன்னும் சூப்பர்.. இருவரும் தாங்கள் எதிரிகள் இல்லை என்பதை உணர்த்தும் அற்புத தருணங்கள் அவை.

கதாநாயகி நமீதா பிரமோத்… சிரிக்கிறார்… சிரிக்கிறார்.. சிரித்துக்கொண்டே இருக்கிறார்.. அதனால் என்ன..? பார்க்க நன்றாகத்தானே இருக்கிறது.. பார்த்துக்கொண்டே ரசித்துவிட்டுத்தான் போங்களேன்.. துல்கரிடமும் உன்னியிடமும் தனது நட்பை பேலன்ஸ் செய்ய அவர் படும் பாடு இருக்கிறதே.. கேரக்டருக்கு நமீதா ஏக பொருத்தம்..

க்ளைமாக்ஸில் கால் மணி நேரம் மட்டுமே (நட்புக்காக) வருகிறார் கலெக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் நிவின் பாலி.. ஆனால் அவர் மூலம் தான் துல்கருக்கு என்ன நடந்தது என்கிற சஸ்பென்சை இயக்குனர் அவிழ்த்திருப்பதால் அவரது கேரக்டரும் முக்கியத்துவம் பெறுகிறது.

அனூப் மேனன் காபித்தூளில் புளியங்கொட்டையை அரைத்து மிக்ஸ் பண்ணியதுபோல சகுனித்த்னத்துடன் கூடிய வில்லத்தனம் காட்டியிருக்கிறார். இதுநாள் வரை தன்னம்பிக்கை டானிக் கொடுக்கும் கேரக்டர்களிலேயே அவரை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி தரும் புதுசு.

துல்கரின் தாயாக வரும் லேனாவுக்கு இதில் முக்கியமான முழு நீள கதாபாத்திரம். நிறைவாகவே செய்திருக்கிறார்.. குறிப்பாக அவரது பிளாஸ்பேக் காட்சிகள் சூப்பர். அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருக்கிறார் உன்னியின் அம்மாவாக வரும் முன்னாள் நடிகை சார்மிளா.

ஜோமோன் டி.ஜானின் ஒளிப்பதிவும், பிஜிபாலின் இசையும் கதையை டிஸ்டர்ப் செய்யாமல் காட்சிகளின் கூடவே சரிக்கு சமமாக பயணிக்கின்றன. ரஞ்சன் ஆப்ரஹாமின் படத்தொகுப்பு பிளாஸ்பேக் முறையில் தனது கத்திரியை விளையாட விட்டிருப்பது நன்றாக இருக்கிறது என்றாலும் கத்திரியை கொஞ்சம் அங்கங்கே மாற்றிப்போட்டு இருந்தால் விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும்..

தான் இயக்கம் படம் என்றால் குடும்பத்துடன் பார்க்கலாம் என்பதை இந்தப்படத்திலும் நிரூபித்திருக்கிறார் லால் ஜோஸ். திருடன் மகன் திருடனாகத்தான் வருவான் என்கிற வாதத்தை உடைத்து ஒரு முன்னுதாரணமான படத்தை கொடுத்திருக்கிறார்… இரண்டு ஹீரோக்களை சரியாக பேலன்ஸ் செய்து லைட்டான ஆக்ஷன், மீடியமான காதல் என சரிவிகிதத்தில் கலந்து குடும்ப மசாலா கிளறியுள்ளார் லால் ஜோஸ்..