மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களுக்கு மரியாதை செய்த விக்ரம்..!

நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களுடன் சேர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல பகுதியிலிருந்து வந்திருந்த மூவாயிரத்திற்கும் அதிகமான விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களை தங்களது வீட்டு திருமண வைபவங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள். அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்து சொல்லும் பாக்கியம் கிடைக்கும். ஆனால் நடிகர் விக்ரம் தனது மகள் திருமண வரவேற்பின்போது, தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மண்மக்களைச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்தனர். அத்துடன் தங்களின் இந்த கனவை நிறைவேற்றியதற்காகவும், தங்களையும் ஒரு பிரபலமான நட்சத்திரங்களைப் போல் மதிப்பளித்ததற்காகவும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல இடங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விக்ரமை மனதார பாராட்டினர்.

இதை பார்க்கும்போது, சீயான் விக்ரம் மிகச்சிறந்த ஒரு முன்னூதாரணத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள் திரையுலகினர். மேலும் இந்த வரவேற்பு நிகழ்சியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே அவர் நடித்த ‘மீரா’ படத்தில் இருந்து ‘ஓ பட்டர்ஃப்ளை’ என்கிற பாடலையும் பாடினார் சீயான் விக்ரம்.