ஆர்யா, விஜய்சேதுபதிக்கு 45 நாள் சிறைவாசம்..!


எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெகுவேகமாக வளர்ந்துவரும் ‘புறம்போக்கு’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் படத்தில் ஒரே ஒரு கதாநாயகி கார்த்திகா தான்.

தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை பின்னிமில்லில் மிகப்பெரிய பிரமாண்டமான ஜெயில் செட் ஒன்றை ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் தலைமையிலான டீம் ஒன்று ராப்பகலாக உழைத்து உருவாக்கியுள்ளது. ஏற்கனவே ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்ட் டைரக்‌ஷனில் நம்மை அசத்தியவர்தான் இந்த செல்வகுமார். கிட்டத்தட்ட இரண்டுகோடி ரூபாயை இதற்காக ஒதுக்கியிருக்கிறார்களாம். படத்தை தயாரிப்பது யுடிவி நிறுவனம் என்பதால் செலவைப்பற்றி கவலைப்படுவார்களா என்ன..?

ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் கார்த்திகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த செட்டில் 45 நாட்கள் படமாக்கப்பட இருக்கின்றன.. ஆக படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இன்றிலிருந்து தொடர்ந்து இந்த சிறைச்சாலை செட்டில் எடுக்கப்படுவதால் இவர்கள் அனைவருக்கும் 45 நாட்கள் அறிவிக்கப்படாத சிறைவாசம் என்றுதான் சொல்லவேண்டும்.