விஜய் படத்துக்கு சிக்கலை உருவாக்கிய ‘மெரசலாயிட்டேன்’..!

Merrasalaitan Movie Poster

ஒவ்வொருமுறை விஜய் படம் ரிலீசாகும் நாட்கள் நெருங்கும்போதெல்லாம் ஏதோ ஒரு திசையிலிருந்து எதிர்பாராத வகையில் பிரச்சனை ஒன்று முளைப்பது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுநாள் வரை எல்லாமே சுமூகமாகத்தான் போய்க்கொண்டு இருந்தன.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஏ.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2014- ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் ‘மெரசலாயிட்டேன்’ எனும் பட டைட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ‘மெர்சல்’ டைட்டில் பதிவு செய்வதற்கு அந்நிறுவனம் ஆட்சேபனை தெரிவிக்கவே, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் நேரடியாக ட்ரேட்மார்க்கில் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றிருக்கிறது தேனாண்டாள் நிறுவனம். இதுகுறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘மெர்சல்’ படத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பல கோடி ரூபாய் செலவு செய்து தற்போது மெர்சல் படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

அக்-3ஆம் தேதிக்கு இதுகுறித்த அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பதால் ‘மெர்சல்’ தொடர்பான எந்த விளம்பரங்களையும், வியாபார முயற்சிகளையும் அதுவரை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதேபோலத்தான் துப்பாக்கி படம் ரிலீசுக்கு தயாரானபோது, கள்ளத்துப்பாக்கி என்கிற படத்தை தயாரித்தவர்கள் அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விஜய்யின் பக்கம் நியாய தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.