விஜய் ஆண்டனிக்கு சரத்குமார் – ஞானவேல்ராஜா பாராட்டு..!

vijay antony in annaadurai

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, விஜய் ஆண்டனியின் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும் என்றார் மேலும் அவர் பேசியதாவது..

“ஒவ்வொரு விஷயத்திலும் விஜய் ஆண்டனி தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார். ஆனால் இதே தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார்கள் வந்திருக்கிறது. ஒரு நடிகர் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். எடுத்தவரை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்கிறார். அந்த நடிகரால் தயாரிப்பாளருக்கு 18 கோடி நஷ்டத்தில் இருக்கிறது.

ஒரு பிரபல காமெடி நடிகரும் அந்த புகாரில் சிக்கி, தயாரிப்பாளர்களை காயப்படுத்தி இருக்கிறார். அப்படிப்பட்ட சிலர் இருக்கும் இந்த இண்டஸ்ட்ரியில் விஜய் ஆண்டனி மாதிரி இரவு பகலாக உழைக்கும் நடிகர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும்” என்றார் ஞானவேல் ராஜா.

“வாழ்க்கையில் உழைப்பையும், உண்மையையும் மட்டும் தான் எப்போதும் நம்புவேன். எதற்கும் பயப்படவே மாட்டேன். யார் எப்போது அழைத்தாலும் இரவு, பகல் பாராமல் அங்கு போய் உதவி செய்பவர் சரத்குமார். அவர் தான் சீனிவாசனிடம் கதையை கேட்டு, என்னையும் கதை கேட்க வைத்தார். விஜய் ஆண்டனியை எனக்கு சன்டிவி காலத்திலேயே நன்றாக தெரியும். விஜய் ஆண்டனி தான் அந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்றவுடன், அவரை போய் கேட்க சொன்னேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் மாதிரி உதவி செய்ய பலர் முன் வந்திருக்கிறார்கள். ஆனால் விஜய் ஆண்டனி எனக்காகவே படத்தை ஒப்புக் கொண்டு நடிக்க முன் வந்தார். பல உண்மையான மனிதர்கள், கொட்டிய உழைப்பு தான் இந்த அண்ணாதுரை. விஜய்னு பேர் வச்சாலே பூனை மாதிரி ரொம்ப அமைதியா இருப்பாங்க, அது ஜோசப் விஜயா இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியா இருந்தாலும் சரி. இது சூர்யவம்சம் மாதிரி ரொம்பவே பாஸிடிவ்வான படம்” என்றார் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார்.

இந்த விழாவில் பேசிய சரத்குமார், “சர்ச்சைகள் இருந்தால் தான் படம் ஓடும் என்றில்லை, அண்ணாதுரை சர்ச்சை இல்லாமலேயே பெரிய வெற்றியை பெறும். அப்படிப்பட்ட கதை, திரைக்கதையை எழுதி இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கிறார். இந்த மேடையில் அரசியல் பற்றி பேசக்கூடாது என முடிவெடுத்து நான் அண்ணாதுரையை பற்றி மட்டும் தான் பேச வந்தேன். விஜய் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று நான் அன்றே சொன்னேன், அது மாதிரி விஜய் ஆண்டனியும் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ஆவார். கருத்துக்களை தைரியமாக களத்தில் சொல்ல வேண்டும், ட்விட்டரில் சொல்லக் கூடாது என்றார் நடிகர் சரத்குமார்.