உதயநிதியின் அரவணைப்பில் விஜய் படம்..!

 

உதயநிதி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார், தனது தந்தையுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு சென்று வந்தார், தனது சொந்தப்பட தயாரிப்புகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றுதானே நினைக்கிறீர்கள்.. அத்துடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.. நல்ல படங்கள் கண்ணில் பட்டால் அதை வெளியிடுவதற்காக உடனே ஆதரவுக்கரமும் நீட்டுகிறார்.

அப்படித்தான் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள அவரது கனவுப்படமான ‘சைவம்’ ரெட் ஜெயண்ட் மூவீஸின் கைகளுக்குள் வந்ததும். இத்தனைக்கும் சொந்தமாகவே இந்தப்படத்தை தயாரித்த விஜய், இதை யார் மூலம் ரிலீஸ் செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருந்தார். ஆனால் இந்தப்படத்தின்  வினியோக உரிமையை வாங்க சில நிறுவனங்களும் முயற்சி செய்துகொண்டுதான் இருந்தன.

படத்தை பார்த்தார் உதயநிதி. தமிழ்நாடு முழுவதும் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் இந்தப்படம் வெளியிடப்படும் என ஒப்பந்தத்தை போட்டுவிட்டு தான் நடிக்கும் படத்தின் வேலைகளை பார்க்க போய்விட்டார். அந்தவகையில் விஜய்யின் கனவுப்படம் குன்றின் மேலிட்ட விளக்காய் ஜொலிக்கத்தான் போகிறது.