சிங்கப்பாதையில் விஜய்யின் ‘புலி’ப்பாய்ச்சல் – விஜய் பிறந்தநாள் கட்டுரை

இருப்பதிலேயே கடினமான செயல் குழந்தைகளை கவர்வதுதான். காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. ர‌ஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்‌ஷனா இல்லை காமெடியா… எது என்று தெ‌ரியாது. வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் இரண்டு பேர் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். விஜய்யின் படங்கள், அவ‌ரின் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் குழந்தைத்தனத்தின் வெற்றியாக கூட இதனை சொல்லலாம்.

‘நாளைய தீர்ப்பு’ படத்தில் விஜய் அறிமுகமானபோது, இப்போதைய உயரத்தை எட்டுவார் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இருபது வருட கடுமையாக உழைப்பில்தான் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் விஜய். அவரின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தான் காரணம் என்பதை மறுக்கமுடியாது.

படிப்படியாக, நடனம், நடிப்பு, ஆக்‌ஷன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்ட விஜய், தொடர்ந்து நாலு ஃபைட், அஞ்சு பாட்டு, என ஒரு ஃபார்முலா வளையத்திற்குள்ளேயே தந்தையின் உதவியுடன் வெற்றிகரமாக வண்டி ஓட்டினார்.

ஆனால் ‘பூவே உனக்காக’ படத்தின்மூலம் இந்த வளையத்தை உடைத்து இவரை வெளியே இழுத்துவந்தார் இயக்குனர் விக்ரமன். ‘விஷ்ணு’, ‘ரசிகன்’, ‘கோயம்புத்தூர் மாப்ளே’ போன்ற படங்கள் மக்கள் மத்தியில் விஜய்யை பற்றி உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை சட்டென்று இந்தப்படம் உடைத்துப்போட்டது. அந்தவகையில் ‘பூவே உனக்காக’ விஜய்யின் வெற்றியின் முதல் படிக்கட்டு என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்து வெளியான ‘லவ்டுடே’ படத்தின் வெள்ளிவிழா வெற்றி இளைஞர்களிடம் இவரது இடத்தை உறுதிப்படுத்தியது. 1998ல் ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலுக்கு மரியாதை’ விஜய்யை தங்கள் வீட்டு பையனாக அனைவரையும் உணர வைத்தது. இந்த படத்தின் வெற்றி அதுவரை இளைஞர்கள் மட்டுமே பார்த்துவந்த விஜய்யின் படங்களுக்கு வயதானவர்களையும் இழுத்துவர ஆரம்பித்தது.

வித்தியாசமான வேடத்தில் முயற்சி செய்வோமே என ‘பிரியமுடன்’ படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக சவாலான வேடத்தை ஏற்று அதிலும் சாதித்துக் காட்டினார் விஜய்.. இந்த இடத்தில் விஜய் சுதாரித்துக்கொண்டாலும் அவருக்கு தான் போகவேண்டிய பாதை இதுதான் என்று தெளிவாக புலப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.. ஆனால் ஒன்று இதுவரை தனக்கு கிடைத்த ரசிகர்களை குடும்பத்தோடு தக்கவைத்துகொள்வதில் மட்டும் உறுதியாக இருந்தார் விஜய்.

அந்த உறுதிக்கு உரம் சேர்ப்பதுபோல அமைந்தது எழிலின் இயக்கத்தில் வெளியான ‘துள்ளாத மனம் துள்ளும்’. அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த கூடி கதாபாத்திரமும் சிம்ரனுக்கும் அவருக்குமான கவித்துமான காதலும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு அழைத்து வந்தன. அருமையான கதை, இனிமையான பாடல்களுடன் விஜய்யின் நடிப்பும் நடனமும் நகைச்சுவையும் இந்த படத்தை வெள்ளிவிழா காண வைத்தன..

எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தின் மூலம் விஜய்யின் இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோவை அற்புதமாக பிரதிபலித்திருந்தார் விஜய். வரிசையாக நான்கு படங்கள் சரியாக போகாதிருந்த நிலையில் விஜய்க்கு புது ரத்தம் பாய்ச்சியது ‘குஷி’.

அதேபோல கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் இருந்த விஜய்க்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்த திருப்பம் தான் ‘திருமலை’. அதுவரை காதல் நாயகனாக வலம் வந்து கொண்டு இருந்த விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியதும் பஞ்ச் டயலாக் பேசி நடிக்க ஆரம்பித்ததும் இந்த படத்திலிருந்துதான். இந்த படத்திலிருந்துதான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது.

தில், தூள் என்று தொடர்ஹிட்டுக்களை கொடுத்துவந்த இயக்குனர் தரணி ‘கில்லி’ படத்திற்காக விஜய்யை அணுகினார். அந்த சந்திப்பு விஜய்யின் சரித்திரத்தையே மாற்றி எழுதியது. 2004ல் வெளியான கில்லி திரைப்படத்தின் வீச்சு, படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தவர்களின் பரவசமான முகங்களில் பிரதிபலித்தது. ‘அப்படிப் போடு… போடு’ என்று தமிழ்நாடே ஆடித் தீர்த்தது. தன்னை சுற்றி வளைத்த ஆயிரம் பேரை ஒற்றை ஆளாய் சமாளித்த விஜய்யின் சாகசம் ஏன், எப்படி என்று கேட்காமல் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது. சொல்லப்போனால் சிறு குழந்தைகள்கூட விஜய்க்கு ரசிகர்களாக மாற ஆரம்பித்தது இந்த தருணத்தில்தான்.

இயக்குனர் பேரரசுவின் காம்பினேஷனில் திருப்பாச்சியும் சிவகாசியும் விஜய்யின் வெற்றிக்கு கலர் சாயங்கள் பூசின. திருப்பாச்சி படத்தில் அவரின் தங்கை செண்டிமெண்ட் தாய்மார்களிடையே பரவசத்தை ஏற்படுத்த, எதிரிகளை வீழ்த்த அவர் வகுக்கும் வியூகம் ரசிகர்களிடம் கைதட்டலை அள்ளியது. குறிப்பாக திருப்பாச்சி அருவா பற்றி வில்லனிடம் அவர் பேசும் வசனம் அன்றைய குழந்தைகளின் ரைமிங்காகவே மாறிப்போனது.

காலச்சக்கரம் வெற்றிப்பாதையில் மட்டுமேவா அழைத்துச்செல்லும்? சில படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த விஜய்க்கு பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளியான தெலுங்கு ரீமேக்கான ‘போக்கிரி’ அசுரத்தனமாக வெற்றிபெற்று விஜய்யின் காயங்களுக்கு மருந்து பூசியது. குறிப்பாக விஜய் இந்த படத்தில் பேசிய ஸ்லாங் வித்தியாசமாக இருந்தது உண்மை. “நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்” என்று விஜய் பேசும் வசனத்தை படம் பார்த்துவிட்டு வந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான இடங்களில் எல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.

ஒருகட்டத்தில் வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் போட்டிபோட்டு அவரது மாஸ் இமேஜுக்கு குழிபறிக்க, விஜய் இனிமேல் அவ்வளவுதானோ என்ற ஒரு சூழல் உருவானபோது அவரை தூக்கி நிறுத்திய படம் தான் ‘காவலன்’. நான்கு படங்களின் தோல்வியில் இருந்து அவரை மீட்டுக்கொண்டு வந்த படம். ஆக்‌ஷன் விஜய் இதில் அழகான காதலனாக மாறிப்போனார். மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டிய இந்த படம் சில அரசியல் காரணங்களால் ஒரளவு சுமாரான வெற்றியையே பெற்றது.

அடுத்து வந்த வேலாயுதம், நண்பன் இரண்டு படங்களும் வெற்றிப்படங்கள் தான் என்றாலும் போக்கிரிக்குப் பிறகு அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த படம் என்று ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளியான “துப்பாக்கி”யை தாராளமாகக் கூறலாம். அவரே சொல்கிற மாதிரி “வாழ்க்கை ஒரு வட்டம்.. இன்னைக்கு தோற்பவன் நாளைக்கு ஜெயிப்பான்” என்பது மாதிரி, ரொம்ப நாளாக பெரிய வெற்றிக்காக காத்திருந்து அதிரடியான ஹிட் ஒன்றை கொடுத்தார்.

ஆனால் காலம் மீண்டும் ஒருமுறை சோதனை வைத்த்து ‘தலைவா’ மூலம்.. விமர்சன ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக என பலமுனை தாக்குதல்களுக்கு ஆளானார் விஜய். ஆனால் மோகன்லாலுடன் நடித்த ‘ஜில்லா’ விஜய்க்கு சேதாரமில்லாத வெற்றியைக் கொடுத்து நூறுநாட்களையும் தொட்டது. மீண்டும் ஏ,ஆர்.முருகதாஸுடன் இணைந்து ‘கத்தி’யிலும் வெற்றியையே ருசித்தார் விஜய். இதோ இப்போது இயக்குனர் சிம்புதேவனுடன் சொல்லி அடிக்கும் வெற்றிக்காக ‘புலி’க்கூட்டணி அமைத்திருக்கிறார்.

இன்றும் தமிழ் சினிமா ஹீரோக்களில் டான்ஸ் ஆடுவதில், விஜய்யை மிஞ்ச ஆள் இல்லை என்பதை மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் ஒப்புக்கொள்வார்கள். விஜய் சினிமாவுக்குள் நுழைந்தது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் விஜய் கடந்த வந்தது வெறும் பூப்பாதையில் மட்டுமே அல்ல. முள்பாதையிலும் அவர் சிங்கநடை போட்டதால் தான் இந்த உயரிய இடத்தை அடைந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று பிறந்தநாள் காணும் இளைய தளபதி விஜய்க்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.