நீதிமன்றம் மூலம் ‘விடியல்’ படத்திற்கு விடியல் கிடைத்தது..!

சரத்குமார் – சினேகா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய படம் விடியல். அப்பா, மகன்கள் என்று மூன்று வேடங்களில் சரத்குமார் நடித்த, இந்தப்படம் மூன்று தலைமுறைக் கதையை உள்ளடக்கியது. சினேகா, ஆட்டோகிராப் மல்லிகா இருவரும் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

நாலேகால் கோடிக்கு விடியல் படத்தை தயாரித்துத் தருவதாக சரத்குமார் கூறியதால், முதல் கட்டமாக ரூ 91 லட்சம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தது கிரிகுஜா பிலிம்ஸ். ஆனால் சில பல காரணங்களால் சரத்குமார் அந்தப்படத்தை ஒத்திவைத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் சென்னையில் ஒருநாள், சண்டமாருதம் படங்களை நடித்து, தயாரித்தும் வெளியிட்டுள்ளார்.

இதனை குறிப்பிட்டு விடியல் பட தயாரிப்பாளர் ஏற்கனவே நீதிமன்றத்தின் படியேற, கடந்த டிசம்பர் 31க்குள் படத்தை முடித்து தருவதாக கூறியிருந்தார் சரத்குமார். ஆனால் மீண்டும் சிக்கல் நீடிக்க தயாரிப்பாளர் மீண்டும் கோர்ட் படி ஏறினார். தற்போது வரும் ஆகஸ்ட்-31ஆம் தேதிக்குள் சரத்குமார் ‘விடியல்’ படத்தை முடித்து தரவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.