வெற்றிச்செல்வன் – விமர்சனம்

ஊட்டிக்கு வரும் அஜ்மல், மனோ(பாடகர்) மற்றும் ஷெரீப் ஆகியோர் கஞ்சா கருப்புவின் உதவியுடன் கார் சர்வீஸ் செய்யும் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்கிறார்கள். அங்கே வக்கீலாக இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு அஜ்மல் மீது காதல் உண்டாகிறது.

இந்நிலையில் ஊட்டியில் நண்பர்களுடன் அஜ்மல் செல்லும் வழியில் நிலச்சரிவு உண்டாக அதில் சிக்கியவர்களை மீட்க போராடுகிறார்கள். அதுபற்றிய படம் மறுநாள் செய்த்திதாள்களில் வர, மூவரையும் தேடி போலீஸ் வருகிறது.

அவர்களிடம் இருந்து மூவரையும் காப்பாற்ற ராதிகா ஆப்தே முன் வருகிறார். அப்போதுதான் தெரிகிறது இவர்கள் மூவரும் மனநல காப்பகத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் என்று. அவர்கள் ஏன் தப்பினார்கள்.. போலீஸ் எதற்காக அவர்களை துரத்துகிறது என்பது அதிர்ச்சி தரும் ஃப்ளாஸ்பேக்.
அஜ்மலுக்கு நீண்டநாட்கள் கழித்து வந்திருக்கும் படம்.. முதல் பாதியில் அஜ்மலின் செய்கைகள் அவரது கேரக்டர் பற்றி ஏற்படுத்தும் குழப்பம் இடைவேளைக்குப்பின் தான் தெளிகிறது. அதனால் ஆரம்பத்தில் அவர் கேரக்டர் மீது கொஞ்சம் எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.
அஜ்மலை காதலிக்கும் அப்பாவிப்பெண்ணாக ஆனால் லாயராக வரும் ராதிகா ஆப்தே மிடுக்கான அழகு. அவரது வாயாடி தங்கைதான் வயதுக்கு மீறி பேசுகிறார்.

அஜ்மலின் நண்பராக பாடகர் மனோ.. அட.. இருபது வருடங்களுக்கு முன் சிங்காரவேலன் படத்தில் கமலுடன் நடித்தபோது எப்படி இருந்தாரோ அதேமாதிரியே இப்போதும் இருப்பது நமக்கு வியப்பை தருகிறது. தலைவாசல் விஜய்யின் கேரக்டர் கச்சிதம்.. அழகம் பெருமாளுக்கு முதல்பாதியில் நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், பிற்பாதியில் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். கஞ்சா கருப்பு வரும் காட்சிகளும் கலகலக்க வைக்கிறது.

மணிசர்மா இசை பெரிய அளவில் நம் மனதை கவரவில்லை.. லோகநாதனின் ஒளிப்பதிவில் மண்சரிவு காட்சிகள் மிரட்டலாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளின் உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலைப்பற்றி கதை பின்னியிருப்பதில் இயக்குனர் ருத்ரன் நம் கவனத்தை ஈர்க்கிறார். ஆனால் முதல் பாதியில் அவர் கதையை நகர்த்தியிருக்கும் விதம் தான் கொஞ்சம் அலுப்பை ஏற்படுத்துகிறது. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம்.