வேட்டை நாய் – விமர்சனம்

நடிகர்கள் : ஆர்.கே.சுரேஷ், சுபிக்சா, ராம்கி, ரமா, நமோ நாராயணன் மற்றும் பலர்

இயக்கம் : ஜெய்சங்கர்

கொடைக்கானல் பகுதியில் தாதாவாக இருப்பவர் ராம்கி. அவரிடம் விசுவாசமான அடியாளாக இருப்பவர் ஆர்கே சுரேஷ். பெற்றோர் இல்லாத அவருக்கு அத்தையும் மாமாவுமான ரமா-நமோ நாராயணன் தம்பதியினர் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளில் இறங்குகின்றனர்.

பெண் பார்க்க போன இடத்தில் ஏதேச்சையாக உறவினர் வீட்டில் தங்கும்போது, அவர்களின் மகளான பள்ளி மாணவி சுபிக்சாவை சுரேஷுக்கு பிடித்து போகிறது. சில பல இழுபறிகளுக்கு பிறகு திருமணமும் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு பிறகு ராம்கியிடம் பார்க்கும் அடியாள் வேலையை விட்டு விட்டு, நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வற்புறுத்துகிறார் சுபிக்சா. ஆரம்பத்தில் கோபப்பட்டாலும், பின் மனம் மாறி சுபிக்சாவின் வழிக்கு வருகிறார். இதனால் ராம்கிக்கு சுரேஷ் மீது கோபம் ஏற்படுகிறது.

தவிர ஆர்கே சுரேஷால் தங்களது ஆள் இறந்துவிட்டதாக கருதும் இஸ்லாமிய அமைப்பினரும் அவரது உயிருக்கு குறி வைக்கின்றனர். திருந்தி வாழ நினைத்த ஆர்கே சுரேஷின் நிலை என்ன ஆனது..? என்பது க்ளைமாக்ஸ்.

கதையின் நாயகனாக ஆர்கே.சுரேஷ். முதல் பாதியில் குற்ற செயல்களில் ஈடுபடுவது, சுபிக்‌ஷாவை துரத்தி துரத்தி காதலிப்பது என்பது எதிர்மறையாக தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் தன் தவறுகளை உணர்ந்து திருந்தும் போது தேர்ந்த நடிகராக பரிணமிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் மிரட்டலை கொடுத்திருக்கிறார்.

சுயநல தாதா கதாபாத்திரத்தில் ராம்கி. தோற்றத்திலும் நடிப்பிலும் ஸ்டைலாக கலக்கி என்றும் நாயகன் என்று நிரூபித்திருக்கிறார்.

நாயகி சுபிக்‌ஷாவுக்கு கதையை தாங்கும் வேடம். இடைவேளை வரை அழகு பதுமையாக வருபவர் ஆர்கே.சுரேஷை திருமணம் செய்துகொண்ட பிறகு பொறுப்பான பெண்ணாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களான ரமா, விஜய் கார்த்திக், நமோ நாராயணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை, பெண்கள் பேச்சை கேட்காத ஆண்களின் நிலைமை என ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்த கதை தான் என்றாலும் அதை கொடைக்கானல் பின்னணியில் சொல்லி வித்தியாசப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜெய்சங்கர்…