வெள்ளக்கார துரை – விமர்சனம்

 

கிராமத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார்கள் விக்ரம் பிரபுவும் சூரியும். உதவிக்கு கூடவே இரண்டு நண்பர்களும் இவர்கள் ஜான் விஜய்யிடம் வட்டிக்கு பணம் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்காததால், தனது வீட்டில் எடுபிடி வேலை செய்யவைக்கிறார் ஜான்விஜய்.

அந்த வீட்டில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவின் மீது விக்ரம் பிரபுவுக்கு காதல் வருகிறது. அவரை ஜான் விஜய்யின் தங்கை என விக்ரம்பிரபு தப்பாக நினைக்க, திடீரென அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவே அதிர்ச்சியாகிறார் விக்ரம் பிரபு.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நிச்சயதார்த்தம் முடிந்த இரவே வீட்டைவிட்டு ஓடுகிறார் ஸ்ரீதிவ்யா. பின்னாலேயே பின் தொடரும் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யாவுடன் தனது மாமா சிங்கம்புலி வீட்டில் தஞ்சமடைகிறார். அங்கே தான் ஸ்ரீதிவ்யாவின் பிளாஸ்பேக் தெரியவருகிறது.

இந்நிலையில் விக்ரம் பிரபு தான் ஸ்ரீதிவ்யாவை கடத்திவிட்டார் என நினைத்து தேடிவரும் ஜான்விஜய், விக்ரம் பிரபுவை அடித்துப்போட்டுவிட்டு ஸ்ரீதிவ்யாவை இழுத்துச்சென்று மணம் முடிக்க முயற்சிக்கிறார். விக்ரம் பிரபு ஜான் விஜய்யின் திட்டத்தை முறியடித்தாரா, ஸ்ரீதிவ்யாவை கரம் பற்றினாரா என்பது ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்.

சிட்டி சப்ஜெக்ட்டில் ஆக்ஷன் ஹீரோவாகவே தொடர்ந்து நடித்துவந்த விக்ரம் பிரபுவுக்கு இது ஒரு சேஞ்ச் ஓவர் கேரக்டர். ஆக்ஷனை குறைத்து காமெடியை முயற்சி செய்திருக்கிறார்.. சூரி கூடவே இருக்கும் தைரியத்தில் காமெடியில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். ஆக்ஷனிலும் குறை வைக்கவில்லை.

ஸ்ரீதிவ்யா பார்க்க, பார்க்க அவ்வளவு அழகாக தெரிகிறார். நடிக்கும்படியான வேடம் இல்லையென்றாலும் காமெடியில் சொல்லிக்கொள்ளும்படி  சோபிக்கிறார். காமெடிப்படத்திற்கும் அதுதானே வேண்டும்..? படத்தின் பிரதான தூண் சூரி தான்.. அடிப்பதிலும், அடிவாங்குவதிலும், பஞ்ச் பேசுவதிலும் என எல்லா ஏரியாவிலும் காமெடியை வாரி இறைத்திருக்கிறார். அவர் ஜான் விஜய் வீட்டில் இருந்து தப்பி ஓடும் காட்சியும், சிங்கமுத்து அன் கோவை உசுப்பேற்றிவிடும் காட்சியும் சில சாம்பிள்கள்..

வில்லத்தனம் கலந்த காமெடி கேரக்டர் என்றால் ஜான் விஜய்க்கு ரெடிமேட் கோட் மாதிரி.. சரியாக செட் ஆகிறது. ஆரம்ப காட்சிகளை விட க்ளைமாக்ஸில் தான் அவரது கலாட்டா ரசிக்கவைகிறது. மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, சிங்கமுத்து, திண்டுக்கல் சரவணன், மிப்பு என நகைச்சுவை பட்டாளமே இருக்கிறது படத்தில். பதினாறு பாஷைகள் தெரிந்தும் ஊமையாக இருக்கும் அந்த தீவிரவாதி கேரக்டர் சூப்பர்..

மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் இருவரையும் இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம். சிங்கம்புலி ‘மண்ணில் இந்த காதலின்றி’  பாடும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. ஆண்கள் மட்டும் தான் காமெடி பண்ணமுடியுமா, நாங்க பண்ணமாட்டோமா என களத்தில் இறங்கியிருக்கிறார்கள் ‘தேனடை’ மதுமிதாவும் விஜய் டிவி நந்தினியும்.

படத்தில் நான்கு பாடல்கள தான் என்றாலும் டி.இமான் தனது இசையால் அதை வாழைப்பழத்தில் மருந்தாக கொடுத்திருக்கிறார். அதிலும் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள ‘காக்கா முட்டை’ ரிப்பீட் கேட்கும் ரகம். கிராமத்துக்கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ற பணியை சூரஜ் நல்லுசாமியின் கேமரா செவ்வனே செய்திருக்கிறது.

லாஜிக் இல்லாத கதை தான்.. ஆனால் காட்சிக்கு காட்சி சிரிக்கவைக்க முடிவு செய்தபின் எதைப்பற்றியும் இயக்குனர் எழில் யோசிக்கவில்லை என்று பல இடங்களில் நன்றாக தெரிகிறது.. ஆனால் விக்ரம் பிரபு போன்ற வளரும் இளம் ஹீரோக்களுக்கு இப்படி ஒரு காமெடி பாதையும் தேவைப்படுகிறது என்பதற்கேற்ற மாதிரி ஜனரஞ்சகமாக கொண்டு செல்வதில் ஓரளவு வெற்றிக்கோட்டிற்கு அருகில் சென்றிருக்கிறார் இயக்குனர் எழில்.