வஜ்ரம் – விமர்சனம்


சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படும் ஸ்ரீராம், கிஷோர் பாண்டி, குட்டிமணி நால்வரும், ஜெயிலில் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் இரண்டு போலீசாரை தாக்குகிறார்கள்.. அவர்களை கோர்ட்டிற்கு அழைத்துச்செல்லும் காவல்துறை அதிகாரி, ஜீப் விபத்தில் அவர்கள் நால்வரும் இறந்ததாக ஊருக்கு நாடகம் ஆடிவிட்டு, நான்கு ‘பசங்க’ளையும் கல்வி அமைச்சரை கடத்த சொல்லி வேலைகொடுக்கிறார்.

‘பசங்க’ளும் ஒப்புக்கொண்டு கடத்தி வருகிறார்கள்.. அமைச்சரை அல்ல.. அவரது மகள் பவானியை.. இவர்களின் செயலால் கோபமாகும் அதிகாரியையும் அடித்து விரட்டுகிறார்கள்.. கடத்தல் விபரம் அறிந்து காட்டுக்குள் தேடிவரும் பவானியின் தாய்மாமனை புத்திசாலித்தனமாக காலி பண்ணுகிறார்கள்..

அமைச்சருக்கு சில கோரிக்கைகளை வைத்து அதை நிறைவேற்ற சொல்லி கெடு விதிக்கிறார்கள்.. அமைச்சரும் அவரது மனைவியும் அவர்களை மடக்க மாற்று திட்டம் போடுகிறார்கள். அமைச்சரின் குயுக்தியான திட்டம் பலித்ததா? பசங்களின் திட்டம் வென்றதா? அமைச்சர் மகளை இவர்கள் கடத்தியதன் பின்னணி என்ன என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

சின்னப்பையன்களாகாவும் நடிக்க முடியாத, வாலிபனாகவும் நடிக்கும் தோற்றம் இல்லாத நான்கு ‘பசங்களுக்கும் தோதான கதையை உருவாக்கி, அவர்களை வைத்து காட்டுக்குள் கோலிசோடா’ ஆடியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.

ஸ்ரீராம், கிஷோர் பாண்டி, குட்டிமணி என இந்த நால்வரின் ஆக்ரோஷமான, துடிப்பான நடிப்பை தனித்தனியாக பாராட்டாமல், மொத்தமாகவே பாராட்டிவிடலாம். அமைச்சரின் மகளாக வரும் பாணி ரெட்டியும், பசங்க’லின் தோழியாக வரும் சமீராவும் மனதை தொடுகிறார்கள். அமைச்சரின் பி.ஏ.வாக படம் முழுவதும் கலகலப்பை குத்தகைக்கு எடுத்துள்ளார் மயில்சாமி.

வில்லத்தனம் காட்டும் ஜெயபிரகாஷ் கடைசிவரை அதை சீராகவே மெயின்ட்டன் பண்ணியிருக்கிறார். போதாததற்கு அவரது மனைவியாக வரும் சனா, வில்லத்தனத்தில் அவரையே ஓவர்டேக் பண்ண முயற்சிக்கிறார். கல்விக்காக பாடுபடும், சுயநலமில்லாத தம்பிராமையாவின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் தான் இந்தப்படத்தின் ஹைலைட்.. அவரது கதாபாத்திரம் மூலமாக இன்றைய கல்வி முறையில் அரசு காட்டும் மெத்தனத்தை அங்கங்கே சாடியிருப்பது நல்ல விஷயம்.

ஏ.ஆர்.குமரேசன் ஒளிப்பதிவில் காடு மற்றும் ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன. கன்றுகள் புலியை எதிர்க்கும் காட்சியை நான்கு சிறுவர்களும் ‘கோலிசோடா’விலேயே நிகழ்த்திக்கட்டியதால் இந்தப்படத்தில் அவர்களின் சண்டைக்காட்சி நம்பும் விதமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுவே கோலிசோடாவை ஞாபகப்படுத்துவதுதான் அதன் மைனஸும் கூட.. குறிப்பாக அமைச்சர் ஜெயப்பிரகாஷை அவர்கள் தாக்கும் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி.

அமைச்சரை நான்கு சிறுவர்கள் எதிர்ப்பது, அவரது வீட்டிற்கே சென்று தாக்குவது, காட்டுக்குள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிப்பது என லாஜிக் மிஸ்ஸாகும் இடங்கள் பல இருக்கின்றன. ஆனாலும் கல்விக்கான முக்கியத்துவத்தை கொடுத்து கதையை அமைத்ததிலும், பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கும் விதமான காதல் காட்சிகளை அறவே தவிர்த்ததிலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியதிலும் ‘வஜ்ரம்’ படத்தை, வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.