“நான் ஊர்ல இல்லாத நேரம் இரண்டு கவிஞர்கள் உருவாகிட்டாங்க” – வைரமுத்து

மணிரத்னம் இயக்கியுள்ள 24வது படம் தான் ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசை.. வேறு யார். ஏ.ஆர் ரஹ்மான் தான். படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்திற்காக முதன் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். இந்த நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, “மணிரத்னத்தின் 24 படங்களும் எனக்கு 24 விதமான அனுபவத்தை தந்திருக்கின்றன” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தப்படத்தில் பாடல் எழுதிய அனுபவம் குறித்து வைரமுத்து பேசும்போது, “இந்தப்படத்தில் ஏழு பாடல்களில் ஆறை நான் எழுதியிருக்கிறேன். ‘மனமன மெண்டல் மனதில்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும் மணிரத்னமும் எழுதியிருக்கிறார்கள்.. அது எப்படி நிகழ்ந்தது என்றால் நான் ஊருக்கு போயிருந்த நேரத்தில் இங்கே இரண்டு புதிய கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.. இனிமேல் ஊருக்கு போகாமல் கவனமாக இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்” என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு இசையமைக்க ஆரம்பிக்கும்போது, என்ன மாதிரி பண்ணலாம் என குழப்பம் வர ஆரம்பித்தால் அப்போது முதல் டேஞ்சர் ஆரம்பம் என்று அர்த்தம். அப்படி ஒரு குழப்பம் வராமல் கவனமாக பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

படத்தின் நாயகன் துல்கரோ பரவச நிலையில் இருக்கிறார்.. “ஸ்கூல்ல படிக்கிறப்ப நான் ஆவரேஜ் ஸ்டூடண்ட் தான். ஆனா மணி சார் படத்துல நடிச்சப்ப ஐ.ஐ.டி, யுனிவர்சிட்டில படிச்சது மாதிரி ஒரு பீல் கிடைச்சது” என்றார்.