பி.சுசீலாவுக்கு புத்தர் சிலை பரிசளித்த வைரமுத்து..!

viramuthu - p.suseela

பின்னணி பாடகி பி.சுசீலா அவர்கள் அதிக பாடல்களை பாடியவர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.. கவிப்பேரரசு வைரமுத்துவும் பி.சுசீலாவை சந்தித்து புத்தர் சிலை ஒன்றை பரிசளித்து அவரை வாழ்த்தினார்.

“இசை என்பது பயிற்சியால் வந்துவிடும்.. குரல் என்பது இயற்கையின் கொடை.. அந்த இயற்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் பயன்படுத்தி இருக்கிறார் பி.சுசீலா அம்மையார்.. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த அவரது புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.” என கவிப்பேரரசு வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, “எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று “கண்ணுக்கு மை அழகு” பாடல். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலை யார் வைத்து பாட வைக்கலாம் என்று கேட்டார். அதற்கு நான், உங்களது இசையில் பாடகி சுசிலா அம்மையார் பாடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்கு பொருத்தமான பாட்டு இதுதான் என்றேன். ஏன் இந்த பாட்டு பொருத்தம் என்று அவர் கேட்டார். தமிழுக்கு சிறப்பான “ழ” எழுத்து இப்பாட்டில் அதிகம் வருகிறது, அந்த “ழ” எழுத்தை உச்சரிப்பதில் பாடகி சுசிலா அம்மையார் அவர்களுக்கு இணை அவர் மட்டுமே என்றேன். தமிழுக்கு சிறப்பு “ழ”கரம், இசைக்கு சிறப்பு பாடகி சுசிலா அம்மையார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

வைரமுத்துவின் சந்திப்பு பற்றி பி.சுசீலா குறிப்பிடும்போது, “சில நாட்களுக்கு முன் சிலோனுக்கு என்னை அழைத்து, எனக்கு கம்பன் விருது கொடுத்து கவுரவித்தனர். அந்நேரத்தில் ஒரு வீட்டின் வாசலில் புத்தர் சிலையை கண்டு அதை என் வீட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் கவிஞர் வைரமுத்து எனக்கு இன்று புத்தர் சிலையை பரிசளித்தது மிகவும் ஆச்சர்யமாகவுள்ளது” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.