வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

Vaigai Express movie review

பத்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘நாதியா கொல்லப்பட்ட ராத்திரி’ படத்தை தமிழில் ஆர்.கேவுக்கு ஏற்ற மாதிரி ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்..

சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ரயிலில் பயணிக்கும் மூன்று இளம்பெண்களின் மர்மமான முறையில் நிகழும் மரணமும் அதனை ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் எப்படி திறம்பட துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதும் தான் மொத்தப்படத்தின் கதை..

இதற்குள் படம் நெடுக அதிரடி திருப்பங்களை வைத்து விசாரணையில் அதிரடி மற்றும் காமெடி இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்துகட்டி கொடுத்திருக்கிறார்கள்..

யூனிபார்ம் போடாத போலீஸ் அதிகாரி கேரக்டர் ஆர்.கேவுக்கு நன்றாகவே பொருந்துகிறது.. ஒவ்வொரு கொலையையும் வித்தியாசமான கண்ணோட்டத்துடன் அணுகுவதும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துகொண்டே செல்வதுமாக ஆர்.கேவுக்கு படம் முழுக்க நிற்க முடியாத வேலைகொடுத்துள்ளார்கள். அவரும் அதை திறம்பட செய்துள்ளார்.

ராதிகா, ஜோதிகா என டபுள் ஆக்சன் ரோலில் அட, அடடே என இரண்டுவிதமாக ஆச்சர்யப்படுத்துகிறார் நீது சந்திரா.. குறிப்பாக சாந்தமான ஹோம்லி அழகுடன் வரும் ஜோதிகா கேரக்டரில் நீது அழகாக தெரிகிறார். அவர் மீதான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் படம் பார்க்கும் யாருக்குமே செம ஷாக்கிங்காகத்தான் இருக்கும்.

ஹீரோவுக்கு அடுத்தபடியாக என்று சொல்லும் விதமாக ஆர்.கேவுக்கு உதவிகரமாக படம் முழுதும் கலகலப்பாக பயணிக்கிறார் நாசர்.. வார்த்தைக்கு வார்த்தை முருகா என அழைப்பது சுவாரஸ்யம். கிட்டத்தட்ட பதினைந்துக்கும் குறையாத முக்கிய நட்சத்திரங்களை அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்குமாறு பயன்படுத்தி இருப்பது உண்மையில் ஆச்சர்யம் தான்.

லொடலொட அர்ச்சனா, சீட்டு விளையாட அழைக்கும் டிடி.ஆர் எம்.எஸ்.பாஸ்கர், கன்னித்தீவு கதை எழுதும் மனோபாலா, எந்நேரமும் எகிறும் பவன், எம்.பியிடமே சலம்பல் காட்டும் ஜான் விஜய், அட்டெண்டராக வரும் அனூப் சந்திரன், டாக்டராக சுஜா என இதில் சிலருக்கு அதிகம் ஸ்கோர் செய்ய வாய்ப்பு.. சுமன், இனியா, ரமேஷ்கண்ணா, சித்திக், ஸ்ரீரஞ்சனி, கோமல் சர்மா, ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பெயரளவில் வந்து போகிறார்கள்.

படத்திற்கு வேகம் தான் பிளஸ்.. பிரபாகரின் வசனங்களில் கூர்மை.. அதை ஆர்.கே நிறுத்தி நிறுத்தி பேசுவதுதான் சற்றே அலுப்பை தருகிறது.. உச்சரிப்பிலும் வேகம் ஏற்றி இருக்கலாம். கடைசிவரை கொலைக்கான காரணங்களை யூகிக்க முடியாமல் கொண்டு சென்றிருக்கும் இயக்குனர் ஷாஜி கைலாஷ் ஒரு முழுமையான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் வைகை எக்ஸ்பிரஸ் – ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்