ஹாரர் காமெடி படத்தில் வைபவ்-நந்திதா

taana

இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கி, அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவை தான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. அதனால் தான் காமெடி கலந்த பேய் படங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பது தான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்து இந்த வகை படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறார் டாணா படத்தின் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி.

“ஹலோ நான் பேய் பேசுறேன்” போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த வகை காமெடி பேய் படங்களில் தன்னை நிரூபித்தவர் வைபவ். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் என இயக்குனரின் தேர்வு எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாப்பாத்திரமாக இல்லாமல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம், பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும். விஷால் சந்திரசேகர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

“இந்த சூப்பர்நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில் தான் அமைந்திருக்கிறது. இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்ப ரசித்தேன். இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உருவானது” என்றார் தயாரிப்பாளர் ‘நோபல் மூவிஸ்’ கலைமாமணி.