வை ராஜா வை – விமர்சனம்

கௌதம் கார்த்திக்கிடம் உள்ள நடப்பதை முன் கூட்டியே அறியும் திறனை பயன்படுத்தி கிரிக்கெட் பெட்டிங்கில் கோடி ரூபாய் லாபம் அள்ளுகிறார் அவருடன் ஆபிசில் ஒன்றாக வேலைபார்க்கும் விவேக். பணத்தை பறிகொடுத்த டேனியல் பாலாஜி, கோவாவில் கப்பல் ஒன்றில் நடைபெறும் சூதட்டாத்தில் கௌதம் கார்த்திக்கை கலந்துகொண்டு கோடிகளில் சம்பாதித்து தருமாறு மிரட்டுகிறான்.

கப்பலில் உள்ள சூதாட்ட குழுவின் பிடியில் தந்திரமாக டேனியலை சிக்கவைத்து சென்னைக்கு தப்பி வருகிறார் கௌதம் கார்த்திக். டாப்சியின் உதவியுடன் தப்பிக்கும் டேனியல், சென்னையில் தனது அக்கா திருமணத்தில் மும்முரமாக இருக்கும் கௌதம் கார்த்திக்கை மீண்டும் தூக்குகிறார்.. இந்தமுறை மீண்டும் கிரிக்கெட் பெட்டிங்கில் கலந்துகொள்ள சொல்லி மிரட்ட, கௌதம் கார்த்திக் என்ன முடிவெடுத்தார் என்பது க்ளைமாக்ஸ்..

நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரிகிறது கௌதம் கார்த்திக் நடிப்பில்.. வசன உச்சரிப்பில்.. அந்த அளவுக்கு அவரை சரியாக த்ரில் வாங்கியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்.. வழக்கம்போல கிளிப்பிள்ளை நடிப்பை தந்திருக்கும் ப்ரியா ஆனந்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

விவேக்கின் கேரக்டர் காமெடி மட்டுமல்லாது, கதையுடனும் சேர்ந்து பயணிப்பதில் கெட்டப் மற்றுமல்ல, நடிப்பிலும் அவரிடம் நிறைய மாற்றம். வழக்கமான சைக்கோத்தனத்தை குறைத்து, அளவான வில்லத்தனம் காட்டும் டேனியல் பாலாஜியும் ஓகே தான்.,

டாப்சி, சதீஷ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் வசந்த் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், அவர்களை தேவையான அளவுக்கு பயன்படுத்திருப்பதை பார்க்கும்போது திரைக்கதையில் எங்கேயும் தொய்வு வந்துவிடக்கூடாது என்பதில் ஐஸ்வர்யா கட்டியிருக்கும் கவனம் தெரிகிறது. க்ளைமாக்ஸில் கொக்கி குமாராக தனுஷின் என்ட்ரி அதிரடியாக இருந்தாலும், படத்தின் முடிவுடன் எந்தவிதத்திலும் ஒட்டாமல் தனித்து நிற்கிறது.

யுவனின் இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்பை வெகுவாக கூட்டுகின்றன. பெண் இயக்குனர்கள் என்றால் இப்படித்தான் படம் எடுப்பார்கள் என்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து கமர்ஷியலாக படம் இயக்கியுள்ள ஐஸ்வர்யா இரண்டு மணி நேர படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதில் ஜெயித்திருக்கிறார்.