வானவராயன் வல்லவராயன் – விமர்சனம்

பொள்ளாச்சி மிராசுதார் தம்பிராமையாவின் மகன்களில் மூத்தவர் கிருஷ்ணா (வானவராயன்) இளையவர் ம.க.ப.ஆனந்த் (வல்லவராயன்) பக்கத்து ஊரில் இருக்கும் ஜெயப்பிரகாஷின் மகள் மோனல் கஜ்ஜாரை காதலிக்கிறார் கிருஷ்ணா.. ஒரு சில மறுப்புகளுக்கு பிறகு காதலை ஏற்கிறார் மோனல். இவர்கள் காதல் மோனலின் வீட்டிற்கு தெரியவர, ஆறுதல் சொல்ல வரும் கிருஷ்ணாவை அடித்து துவைத்து அனுப்பி விடுகிறார்கள்.

மறுநாள் மகளுக்காக மனம் இறங்கி அவர்கள் காதலுக்கு சம்மதிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.. ஆனால் இது தெரியாமல் அண்ணனை அடித்துவிட்டார்கள் என்கிற கோபத்தில் ஜெயப்பிரகாஷின் வீடு தேடிவந்து அவரை அடித்து வேட்டியை உருவி அவமானப்படுத்துகிறார் தம்பி ம.க.ப.

இதனால் காதலுக்கு நிரந்தர சிக்கல் விழுகிறது. அதன்பின் காதலுக்காக கிருஷ்ணா போராட, அதற்கு பிராயச்சித்தம் பண்ண கூடவே களம் இறங்குகிறார் ம.க.ப. ஆனால் தனது மகளை பாரின் மாப்பிள்ளையான சந்தானத்துக்கு பேசி முடிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.. இறுதியில் ஜெயித்தது யார் என்பது தான் க்ளைமாக்ஸ்.

முரட்டுத்தனமான பாசக்கார அண்ணன், தம்பியிடம் சிக்கி காதல் என்ன பாடுபடுகிறது என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள். அண்ணன், தம்பியாக கிருஷ்ணா, ம.க.ப இருவரும் ஏக பொருத்தம்.. காதல் உட்பட எல்லா விஷயங்களிலுமே முட்டாள்தனமாக கிருஷ்ணா முடிவு எடுப்பதை பார்த்து சிரிப்பு வரும் அதே வேளையில், கோபமும் வருகிறது. ஆனாலும் தம்பியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத அண்ணன் கதாபாத்திரத்தில் நிமிர்ந்து நிற்கிறார் கிருஷ்ணா.

வெள்ளித்திரைக்கு புது அட்மிஷனாக என்ட்ரி ஆகியிருக்கும் ம.க.ப கோபமும் கூச்சலுமாக அவரது கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அண்ணனின் காதல் பிரிவதற்கு அவரே காரணம் ஆவதும், பின்னர் அதை சேர்த்துவைக்கிறேன் என மேலும் மேலும் அதில் குழப்பத்தை ஏற்படுத்துவதுமாக அவர் செய்வது அத்தனையும் கலாட்டாதான்.

கதாநாயகி மோனல் கஜ்ஜார்.. இயல்பான அழகுடன் காதலையும் அதன்பின் சோகத்தையும் சமமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார். தம்பி ராமையா-கோவை சரளா தம்பதினரின் ரொமான்ஸ் ரசிக்கவைக்கிறது. மகளின் காதலுக்காக மனம் இறங்குகின்ற, குடிகார தம்பியானாலும் அவனை விட்டுக்கொடுக்காத யதார்த்த கிரமாத்து மனிதராக தனது பாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

மோனலின் அண்ணனாக அட.. எஸ்.பி.பி.சரணா இது.? மெலிந்து ஆளே மாறியிருக்கிறார். ஆனால் நடிப்பில் அந்த மிடுக்கு மட்டும் குறையவில்லை. க்ளைமாக்சிற்கு பத்து நிமிடம் முன்னதாக அதிரடி என்ட்ரி கொடுக்கும் சந்தானம் அந்த கடைசி ஐந்து நிமிடங்களை தன் வசம் எடுத்துக்கொள்கிறார். சிரித்து சிரித்து ஏற்படப்போகும் வயிற்று வலிக்கு தயாராகி கொள்ளுங்கள்..

யுவனின் இசையில் ‘தக்காளிக்கு தாவணியே’ ரசிக்க வைக்கிறது.. ‘வாங்கம்மா வாங்கப்பா’ இனி திருமண வீட்டுப்பாடலாக மாறும். பொள்ளாச்சியின் இயற்கை அழகை அப்படியே அள்ளி வந்திருக்கிறது பழனிகுமாரின் கேமரா என்று சொன்னால் அது வழக்கமானதாக ஆகிவிடும்..

ம.க.ப, ஜெயபிரகாஷின் வீடு புகுந்து அவரை அடித்து அவமானப்படுத்துவது, பின்னர் அண்ணனின் காதலைப்பற்றி லோக்கல் சேனலில் சொல்லி ஊர் முழுக்க பரப்புவது எல்லாமே ஓவர் தான். ஆனால் பின் விளைவுகளைப்பற்றி கவலைப்படாத, தாங்கள் செய்வது மட்டுமே சரியென்று நினைக்கிற அண்ணன் தம்பி கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டதால், தனது விருப்பத்திற்கேற்ப கதையையும் கதாபாத்திரங்களையும் வளைத்திருக்கிறார் இயக்குனர் ராஜமோகன்.

ஆனாலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு சுவராஸ்யமாகவே கதையை நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக சந்தானத்தின் பத்து நிமிட காமெடி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும். வானவராயன் வல்லவராயன் பார்க்க நீங்க முடிவு செய்தால் டிக்கெட் புக் பண்ணலாம். பாதகமில்லை..