‘வா’ – ஆடியோ ரிலீஸ் சுவராஸ்யங்கள்..!

 

ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரத்தினசிவா இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘வா’. அருண்விஜய் ஹீரோ.. கார்த்திகா ஹீரோயின்.. இசை தமன். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கௌதம் மேனன், லிங்குசாமி உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்தப்படத்தின் இயக்குனர் ரத்தினசிவா, பல வருடங்களாக லிங்குசாமியிடம் இயக்குனராக சேர முயற்சித்தவராம். ஆனால் எப்போது போய் நின்றாலும் ‘ட்ரை பண்ணுப்பா’ என்கிற ஒற்றை வார்த்தையை மட்டுமே பதிலாக சொன்னாராம் லிங்குசாமி. அதன்பின் தான் பன்னீர் செல்வத்திடம் உதவியாளராக சேர்ந்தாராம் இரத்தின சிவா.

சொல்லப்போனால் இந்த விழாவிற்கு சிவாவின் குரு பன்னீர் செல்வம், அவரது குரு லிங்குசாமி, அவரது குரு ஏ.வெங்கடேஷ்  என குருமார்கள் அனைவரும் வந்து வாழ்த்தியது ஹைலைட்..

பத்து வருடங்களுக்கு முன் தான் இயக்குனராக வளர்ந்து வந்த காலத்தில், தனது உதவியாளராக இருந்த பன்னீர் செல்வத்திடம் இன்னும் பத்து வருட காலம் கழித்தும் இரண்டு பேர் தாக்கு பிடிப்பார்கள் என கௌதம் மேனனையும், ஏ.ஆர்.முருகதாசையும் குறிப்பிட்டாராம் லிங்குசாமி. இப்போது அப்படி ஒரு லிஸ்டில் இந்தப்பட இயக்குனர் இரத்தினசிவாவையும் சேர்த்துக்கொள்ளலாம் என பாராட்டினார் லிங்குசாமி.

தனது செல்ல ‘விக்டரை’ வாழ்த்த வந்திருந்த கௌதம் மேனன், அடுத்து அருண்விஜய்யை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக வாக்குறுதி அளித்தார். அதேபோல லிங்குசாமியும் சரியான கேரக்டர் வரும்போது அது வில்லனாக இருந்தாலும், ஹீரோவாக இருந்தாலும் அருண்விஜய்யை பயன்படுத்திக்கொள்வதாக கூறினார்.

அருண்விஜய்யை ஒரு ‘நடிகர்’ ஆக காட்டிய எஸ்.பி.ஜனநாதன், அருண்விஜய், மற்றும் தற்போது தனது படத்தில் நடித்துவரும் இந்தப்பட கதாநாயகி கார்த்திகா ஆகியோரை வாழ்த்த வந்திருந்தார்.

இந்தப்படத்திற்காக தான் தயாரித்திருந்த டீசரை போட்டுக்காட்டியே அருண்விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் உட்பட அனைவரையும் வசப்படுத்தியுள்ளார் இயக்குனர் இரத்தினசிவா. இதில் படம் முழுவதும் ட்ராவல் பண்ணும் காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார்.