அனில் கபூரின் ஆட்டத்தால் களைகட்டிய ‘உயிரே உயிரே’ இசை விழா.!

என்றென்றும் இளமையாக காட்சியளிக்கும் திரையுலக மார்கண்டேயினி என்றால் அது சாட்சாத் ஜெயபிரதா தான். எழுபது எண்பதுகளில் இந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக விளங்கிய இவர், அதன் அரசியலில் குதித்து அரசியல்வாதியாக மாறினார். ஆனால் தற்போது தனது மகன் சித்துவை ஹீரோவாக்க வேண்டிய நேரம் வந்துள்ளதால் சினிமா பக்கம் பார்வையை திருப்பியுள்ளார்.

அதிலும் தன்னை வளர்த்துவிட்ட தமிழ் திரையுலகில் தான் தனது மகன் அறிமுகமாகவேண்டும் என்கிற ஆசையில் ‘சத்யம்’ பட இயக்குனர் ராஜசேகரிடம் தனது மகனை ஒப்படைத்துவிட்டார். அவரும் தன பங்கிற்கு சித்துவை செதுக்கோ செதுக்கென்று செதுக்கி ‘உயிரே உயிரே’ படத்தை எடுத்து முடித்துள்ளார்.

வெறும் அறிமுகம் என்றால் தனியாக எடுபடாது என்றுதான் ஜோடியாக் ஹன்ஷிகாவை நடிக்க வைத்து புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளனர். அனூப் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரணம் அறிமுக நாயகனான சித்துவை வாழ்த்த சமாஜ்வாடி கட்சித்தலைவர் அமர்சிங், பாலிவுட் நட்சத்திரம் அனில் கபூர், தெலுங்கு ஸ்டாரும் ரஜினியின் நண்பருமான மோகன்பாபு, மற்றும் எண்பதுகளில் முன்னணி ஹீரோயின்களாக வளம் வந்த சுமலதா, ராதிகா, ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் அனில் கபூர் மேடையில் அமர்ந்திருந்த அனைத்து வி.ஐ.பிகளையும் அழைத்து சூப்பரான டான்ஸ் ஒன்றை ஆடி வந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.