உத்தம வில்லன் – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..!

 

கடந்த இரண்டு வருடங்களாக கமல் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள் தான் தினசரி வந்துகொண்டிருக்கின்றனவே தவிர, கமல் நடித்த படம் எதுவும் ரிலீசாகவில்லையே என்கிற மனக்குறை அனைவருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதைப்போக்கும் விதமாக இதோ முதலில் ‘உத்தம வில்லன்’ படம் ஏப்ரல்-2ல் ரிலீஸாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக அமைந்தது நேற்று ஆரவாராமாக நடைபெற்ற ‘உத்தம வில்லன்’ இசைவெளியீட்டு விழா.

இனி விழா ஹைலைட்ஸ்…

உற்சாகம் கூட்டிய பார்த்திபன்

சென்னை ட்ரேட் சென்டரில் இந்த விழா நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘ஐ’ இசைவெளியீட்டு விழாவில் தொகுத்து வழங்குவதில் நடந்த சொதப்பல்கள் போல இதிலும் நடந்துவிடக்கூடாது என நினைத்தபடியே தான் அமர்ந்தோம். ஆனால் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதற்காக பார்த்திபன் மேடையேறியதுமே பார்வையாளர்களாக வந்திருந்த வி.ஐ.பிகள் மத்தியிலும் ரசிகர்களிடமும் அளவற்ற உற்சாகம் ஏற்பட்டது.. அவர்களின் உற்சாகம் கொஞ்சமும் குறையாமல் கடைசி வரை அனைவரும் ரசிக்கும் பாணியில் விழாவை சுவராஸ்யமாக நடத்தினார் பார்த்திபன்.

பாலசந்தர் கமலுக்கு எழுதிய ‘உயில்’

முதலில் கமலின் குருநாதர், மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒன்று ஆங்கிலத்தில் விஷுவலாக படித்து காட்டப்பட்டது. அதில் தனது சிஷ்யன் கமலின் பெருமைபற்றி பெருமிதத்துடன் கூறியிருந்தார் பாலச்சந்தர். அந்த கடிதம் வாசிக்கப்படும்போது பாலச்சந்தரின் துணைவியார் அதை கேட்டபடி அவ்வப்போது கண்கலங்கியதை காண முடிந்தது.

கமல் அதிரடி என்ட்ரி

அந்த கடிதம் படித்து முடிக்கப்பட்டதும் சர்ப்ரைஸ் என்ட்ரியாக மேடையில் இருந்த திரை இரண்டாக விலக, திரைக்கு நடுவேயிருந்து கமல் மேடைக்கு வர கரகோஷம் அரங்கத்தை அதிரவைத்தது. வந்ததும் தனது குருநாதரின் பேச்சை சுட்டிக்காட்டிய கமல், இதுவரை நான் வாழ்ந்த, இனிமேல் வாழப்போகிற வாழ்க்கைதான் அதற்கு பதில் சொல்லும் விதமாக இருக்கும் என்றார்.

கே.பி இல்லாவிட்டால் திசைமாறி போயிருப்பேன்

“ரஜினி, பாலசந்தரை பார்க்காமல் போயிருந்தால் ‘முரட்டுக்காளை’ மாதிரி சில படங்களில் நடித்து, இந்த நிலைக்கு நிச்சயம் வந்திருப்பார். ஆனால் நான் பாலசந்தரை பார்க்காமல் போயிருந்தால், நிச்சயம் வேறு மாதிரி தான் திசைமாறி போயிருப்பேன்” என கே.பி இல்லாவிட்டால் தான் இல்லை என நெகிழ்வுடன் குறிப்பிட்டார் கமல்.

நாசர் நெகிழ்ச்சி

விழாவில் பேசிய நாசர், உத்தம வில்லன் படப்பிடிப்பின்போது தன் மகனுக்கு நடந்த விபத்து பற்றியும், அந்த சமயத்தில் கமல் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு ஆறுதலாக இருந்ததையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, “நான் நடித்த ஐநூறு படங்களை கூட மறந்துபோகலாம்.. ஆனால் இந்தப்படத்தை மட்டும் என்னால் மறக்கவே முடியாது” என்றார்.. மேலும் அந்த சமயத்தில் பல லட்சம் மதிப்புள்ள செட் ஒன்றை, செலவானாலும் பரவாயில்லை என தனக்காக இருமுறை கமல் பிரித்து போடச்சொல்லிய பெருந்தன்மையை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.

கமலிடம் கர்ப்பத்தை மறைத்த ஊர்வசி

ஊர்வசி மேடையேறியதும் விழா களைகட்டியது. “இந்தப்படத்தில் நடிக்க அழைத்தபோது நான் கர்ப்பமாக இருந்ததை சொல்லாமல் மறைத்து தான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. ஆனால் இரண்டு நாட்களில் கமல் எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். டப்பிங் ஆரம்பித்தபோதுகூட, என்னுடைய போர்ஷனை சீக்கிரமாக பேசி முடிக்க சொன்னார் கமல். அவர் எதற்காக அவசரப்படுத்தினாரோ, அதே மாதிரியே டப்பிங் முடிந்த மூன்றாவது நாள் எனக்கு குழந்தை பிறந்துவிட்டது.” என்று  கமலை ஏமாற்றி, தான் மாட்டிக் கொண்ட கதையைக்கூறி கலகலப்பாக்கினார் ஊர்வசி.

பார்வதியுடன் ஒரு பாட்டு

இந்தப்படத்தில் நடித்துள்ள ‘மரியான்’ பார்வதி மேடைக்கு வந்தபோது, பார்த்திபன் அவரிடம் ஏதாவது பாடுங்கள் என கேட்க, கமல் நடித்த ‘குணா’ படத்திலிருந்து ‘கண்மணி அன்போடு’ பாடலை நான்கு வரி பாடிக்காட்டியது கலக்கல் என்றால், அதற்கு, கீழே அமர்ந்திருந்த கமல், ‘லாலலா லாலாலா’ இணைந்து சுதி சேர்த்து கூடவே பாடியது அசத்தல்.

ஹீரோயின்களுக்கு கிரீடம் சூட்டிய கமல்

இந்தப்படத்தில் நடித்துள்ள ஹீரோயின்கள் பற்றி கமல் பேசும்போது, “பார்வதியை எல்லோருக்கும் தெரியும். ஆனா இந்தப்படம் வந்ததும் பார்வதி யாருன்னு எல்லோருக்கும் தெரியும் என்றார். அதேபோல, “பூஜா போன படத்துல செய்யாம விட்டதை இந்தப்படத்துல செஞ்சிருக்காங்க.. ஆண்ட்ரியா. தான் இதுவரை செய்யாததை இந்தப்படத்துல செஞ்சிருக்காங்க” என்றார். இந்த மூவருக்கும் கமலின் இந்த பாராட்டைவிட சிறந்த விருது எதுவும் உண்டோ..?

வில்லுப்பாட்டுக்கு மரியாதை

இந்தப்படத்தின் ஐந்து பாடல்கள பற்றி திறனாய்வு செய்வதற்காக வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் தலைமையில் கமல், பேராசிரியர் ஞானசம்பந்தன், லிங்குசாமி, மதன்கார்க்கி, விவேகா, பார்த்திபன் என ஆறு பேர் திடீரென மேடையில் நாற்காலிகளை போட்டு அமர்ந்து திறனாய்வு கூட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். சும்மா சொல்லக்கூடாது அதுவும் சுவராஸ்யமாகத்தான் இருந்தது.

‘லிங்குசாமி’ பிரதர்ஸுக்கு கெளரவம்

திருப்பதி பிரதர்ஸ் என்றால் அதன் லோகோவில் நடந்துவரும் நால்வரில், லிங்குசாமியும் அவரது தம்பி போஸும் தான் இதுவரை தெரிந்த முகங்களாக இருந்தார்கள். இந்த விழாவில் மற்ற இருவரான தனது அண்ணன்கள் இருவரையும்  மேடைக்கு வருமாறு லிங்குசாமி அழைக்க, அவர்கள் இருவரின் கையை பிடித்தபடி மேடைக்கு அழைத்து வந்தார் கமல்.

இன்றுதான் முழுமை அடைந்தேன்

இந்தப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, “நானும் கமலின் பக்கத்து ஊர்க்காரன் தான்.. 1992ல் சினிமாவில் உதவி இயக்குனராக நுழைந்தேன்.. 2௦௦1ல் ‘ஆனந்தம்’ மூலம் டைரக்டரானேன்.. ஆனால் இன்று கமல் நடிக்கும் படத்தை தயாரித்ததன் மூலம் தான் நான் சினிமாவிற்கு வந்ததற்கான முழு பெருமையையும் பெற்றிருக்கிறேன்” என்றார்.

போஸுக்கு கிடைத்த பல்பு  

“விஸ்வரூபம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தற்காக கமலுக்கு வாழ்த்துச்சொல்லப்போய் கமல் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை வாங்கி வந்தோம்.. கமல் இரண்டு கதைகளை சொல்ல, அதில் ஒன்றை படமாக்க முடிவு செய்தோம்.. ஆனால் கமல் படத்தை எப்படி தயாரிக்கப்போகிறோம் என நடுக்கம் இருந்தது” என குறிப்பிட்டார் திருப்பதி பிரதர்ஸ் போஸ். ஆனால் லிங்குசாமி குறுக்கிட்டு, “அதன்பின் திடீரென்று ஒருநாள் என்னை மண்டபம் ஒன்றிற்கு வரவழைத்த கமல் என்னிடம் இன்னொரு கதையை கூறினார்.. அதுதான் தற்போது ‘உத்தம வில்லன்’ ஆக படமாகியுள்ளது.. இது போஸிற்கே லேட்டாகத்தான் தெரியும்” என போஸ் பல்பு வாங்கிய கதையை சொன்னார்.

கமலுக்கு இனி இரண்டு கம்பெனி

“தயாரிப்பாளர்களின் குறுக்கீடு இல்லாமல் நான் சுதந்திரமாக படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜ்கமல் நிறுவனத்தை உருவாக்கினேன்.. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நான் நடித்தபோது ராஜ்கமல் பிலிம்ஸில் இருந்ததுபோன்ற சுதந்திரத்தை இங்கும் உணர்ந்தேன். லிங்குசாமி ஒருநாள் கூட படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததே இல்லை.. அதனால் இப்போது என் வசம் இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன” என திருப்பதி பிரதர்சை உச்சி குளிர வைத்தார் கமல்.

ஜிப்ரான் நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று

இந்தப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மீண்டும் வாகை சூடியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். “ஒரு புரபசரை எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ண துடிக்கும் மாணவன் போல கமலிடம் செல்வேன். ஆனால் அவரிடம் உள்ள இசைஞானம் பற்றிய புதிய விஷயங்களை அறிந்து ஒவ்வொருமுறையும் நான் தான்  அவரிடம் இம்ப்ரெஸ் ஆகி திரும்பி வருவேன்” என்றார் ஜிப்ரான்.

தமிழ் வாழ்கன்னு சொன்னா மட்டும் போதுமா

இந்தப்படத்தில் ‘இரண்யன்’ என தொடங்கும் பாடல் ஒன்றை தூய தமிழ் வார்த்தைகளை போட்டு எழுதியிருக்கிறார் கமல். அவரிடம் இந்த வார்த்தைகள் ரசிகர்களிடம் போனால் அர்த்தம் தெரிந்து கொள்வார்களா என மதன்கார்க்கி சந்தேகம் எழுப்ப, “தெரிஞ்சுக்கிட்டு தான் ஆகணும்.. தமிழ் வாழ்கன்னு சும்மா சொன்ன மட்டும் பத்தாது. அதை செயல்லயும் காட்டணும்” என போலி தமிழ் ஆர்வலர்கள் தலையில் குட்டு வைத்தார் கமல்.

குறுந்தகடு முறையில் மாற்றம்

சினிமாவில் எந்த ஒரு புதிய டெக்னாலஜியையும் அறிமுகப்படுத்துவதில் கமல் தான் முன்னோடியாக இருந்துவருகிறார். அந்த வகையில் வழக்கமாக நடக்கும் ‘குறுந்தகடு’ வெளியீட்டு முறையை மாற்றி தனது மொபைல் மூலமாக இணையத்தில் அப்லோடு செய்து புதிய முறையில் இசையை வெளியிட்டு நம்மை மிரள வைத்தார் கமல்.

ஆன்லைனில் அமர்க்களம்

அப்போது மேடையில் இருந்த லிங்குசாமி, இசையை இப்படியே வெளியிட்டாலும் கூட, ஒருத்தர் வெளியிட இன்னொருத்தர் பெற்றுக்கொண்டால் நன்றாக இருக்குமே என கூற, சரி யாரவது பெற்றுக்கொள்ள வேண்டும் அவ்வளவுதானே என கூறிய கமல் சஸ்பென்சாக மும்பையில் இருக்கும் தனது மகள் ஸ்ருதிஹாசனுக்கு போன் போட்டு, ஸ்கைப் எனப்படும் வீடியோ சாட்டிங்கில் உடனே வரவழைத்தார்.

ஸ்ருதி வந்தது உடனே அரங்கத்தில் இருந்த ஸ்கிரீனிலும் லைவ்வாக காட்டப்பட்டது. உடனே ஸ்ருதியிடம், அவருக்கு ‘உத்தமவில்லன்’ பட பாடல்களை தான் மொபைலில் அனுப்பியுள்ளதாகவும், அதனை உடனே டவுன்லோட் செய் என்றும் கூற, அவரும் அதன்படியே செய்தார்.. லிங்குசாமியிடம் திரும்பிய கமல், இப்போ ஓக்கேவா என கேட்க, அவர் முகத்தில் அவ்வளவு பூரிப்பு..

விழாவிற்கு வந்திருந்த வி.ஐ.பி.கள் முகத்தில் கமல், தமிழ் சினிமாவில் டெக்னாலஜியின் இன்னொரு வாசலை திறந்தவிட்டது கண்டு அவ்வளவு ஆனந்தம்.. அந்தவகையில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது ‘உத்தமவில்லன்’ இசை வெளியீட்டு விழா’.