உத்தம வில்லன் – விமர்சனம்

பிரபல சினிமா ஹீரோ மனோரஞ்சன் (கமல்).. அவனை வளர்த்துவிட்ட குரு மார்கதரிசி (கே.பாலசந்தர்).. ஆனால் அவனை கமர்ஷியல் ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவ் (கே.விஸ்வநாத்) தன் மகள் வரலட்சுமியையும் (ஊர்வசி) திருமணம் செய்துவைத்து மனோரஞ்சனை தனது பிடியிலேயே வைத்திருக்கிறார்.

மனோரஞ்சனுக்கு கடந்த காலம் ஒன்றும் அதில், யாமினி என்கிற பெண்ணுடனான காதல் கதையும் இருக்கிறது. அது மனோரஞ்சன் மேல் வரலட்சுமி கொண்ட காதலுக்காக அவனது மேனேஜர் சொக்கு (எம்.எஸ்.பாஸ்கர்) மற்றும் மாமனார் மூலம் துண்டிக்கப்படுகிறது. அந்த யாமினியின் கடைசி ஆசைப்படி இருவருக்கும் பிறந்த குழந்தையான மனோன்மணி (பார்வதி) என்கிற பெண் இருப்பது, அவளின் வளர்ப்பு தந்தையான சகாரியா (ஜெயராம்) மூலம் மனோரஞ்சனுக்கு தெரியவருகிறது.

இந்த நேரத்தில் தான் மனோரஞ்சனுக்கு மூளையில் கட்டி இருப்பதும் கூட அவரின் தோழியான டாக்டர் அபர்ணா (ஆண்ட்ரியா) மூலம் தெரியவருகிறது. தனது உயிர் பிரியும் காலத்துக்குள் தனது குருநாதரான மார்கதரிசியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விரும்பி அவரை தேடிச்செல்கிறான் மனோரஞ்சன்.. அவனது ஆசை நிறைவேறியதா..? எமதர்மன் அதுவரை அவனை விட்டுவைத்தானா என்பது மனதை நெகிழவைக்கும் க்ளைமாக்ஸ்.

உத்தமன் என்கிற எட்டாம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா ஹீரோவாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் கமல். கமலின் நடிப்புக்கென அளவுகோல் எதுவும் இருக்கிறதா என்ன..? மகள் பற்றிய உண்மையை ஜெயராம் சொல்லும்போது நொடிக்கொரு முறை மாறும் முகபாவம் கமலிடம் மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயம்.

மகள் தன்னை வெறுக்கும் காட்சியில் மனம் உடைவதும் தனது குருநாதரிடம் ஒரு நிமிடத்தில் தனது நிலையை கதையாக விளக்குவதும், சினிமாவுக்குள் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ள வரலாற்று கதையில் தனது உத்தமன் கேரக்டருக்காக மெனக்கெட்டுள்ளதும் இது முழுக்க முழுக்க கமல் என்கிற கலைஞன் மீண்டும் தனது விஸ்வரூபம் காட்டியுள்ள படம் என்றே சொல்லலாம்..

ஏதோ கெஸ்ட் ரோலில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோவார் என நினைத்து செல்பவர்களுக்கு, படம் முழுவதும் முழுக்கவே வந்து இன்ப அதிர்ச்சி அளிக்கிறார் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் காட்டும் அன்யோன்யம், அவர்களது இளமை காலகட்டத்தில் கூட இப்படித்தான் பணியாற்றி இருப்பார்களோ என்கிற பரவசத்தையே ஏற்படுத்துகிறது.

மற்ற அனைத்து நடிகர்களுக்கான தேர்வும் பிரமிக்க வைக்கிறது. கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அளவான காமெடி, நெகிழ்ச்சி என கலந்துகட்டி இந்தப்படத்தில் கமல், பாலசந்தருக்கு அடுத்த இடத்தை பிடிக்கிறார்.. கமலின் மாமனாராக வரும் கே.விஸ்வநாத்தின் தெலுங்குப்பேச்சும் கமலை அவர் அடக்கி வைத்திருக்கும் கம்பீரமும் அந்த தயாரிப்பாளர் கேரக்டராகவே தான் காட்சியளிக்கிறார்.

ஜென்டில்மேன் கேரக்டரில் அளவெடுத்தது போல கச்சிதமாக பொருந்தும் ஜெயராமை பார்த்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது. கமலின் மனைவியாக நடித்திருக்கும் ஊர்வசி பிபி பேசன்ட்டாக பண்ணும் ரகளையும் இவர்களது மகன் மனோகரன் தனது தந்தை மீது காட்டும் வெறுப்பும் சினிமா கலைஞனின் குடும்ப பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.. பூஜாகுமார் தான் கற்ற மொத்த வித்தையையும் இதில் இறக்கி வைத்துள்ளார்.

டாக்டராக ஆண்ட்ரியா, கமலுடன் கள்ளத்தனமாக ரொமான்ஸ் பண்ணினாலும், அவரது உயிர் மேல் அக்கறை கொண்டிருக்கும் கம்பீரமான கேரக்டர். சில காட்சிகள் மட்டுமே வரும் பார்வதி தனது தந்தையின் உண்மை முகத்தை அறிந்துகொள்ளும்போது காட்டும் உணர்ச்சிகள் இருக்கிறதே.. அதனால் தானோ என்னவோ நடிப்புக்கு வாய்ப்புள்ள படங்களாக மட்டும் அவர் தேர்ந்தெடுக்கிறாரோ என தோன்றுகிறது.

கதைக்குள் கதையாக வரும் வரலாற்று கதையில் இடம்பெறும் நாசர், சண்முகராஜன் பேராசிரியர் ஞானசம்பந்தன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெடி ஏரியாவை கவர் பண்ணுகின்றன. லேட்டஸ்ட் ட்ரெண்ட், வரலாற்று பின்னணி என இரண்டு சுமைகள் அழுத்தினாலும் கமல் எனும் கலைஞனின் பக்கபலத்துடன் தனது இசையால் வருடிக்கொடுக்கிறார் ஜிப்ரான்.

ஷம்தத்தின் ஒளிப்பதிவில் வரலாற்று காட்சிகள் அசத்தல்… படத்தின் கமலின் அறிமுக பாடல் காட்சியில் கமல் ஆடும் நடனமும், மீசை எடுத்துவிட்டால் தொண்ணூறுகளில் பார்த்து ரசித்த கமலாகவே மாறிப்போவதும் கமலுக்கு மட்டுமே சாத்தியம். கமல் ரசித்து எழுதிய திரைக்கதையை அப்படியே இம்மி பிசகாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்..

பாராட்டுவதற்கு இவ்வளவு நல்ல விஷயங்கள் இருப்பதால், படத்தில் ஆங்காங்கே தோன்றும் ஒரு சில குறைகளும் சந்தேகங்களும் அங்கேயே அடிபட்டு போகின்றன. வழக்கமான கமர்ஷியல் பார்முலாவில் இருந்து விலகி ஆனால் ரசிக்கத்தக்க ஒரு படத்தை கொடுப்பது தான் கமலின் பார்முலா.. அதேபோல சினிமா பின்னணியில் சுவராஸ்யமாக படம் பண்ணுவது என்பதும் ஒரு கலை.. இந்த இரண்டையும் தனது குருநாதர் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் உதவியுடன் கமல் எளிதாகவே சாதித்திருக்கிறார்.