உறியடி-2 – விமர்சனம்

uriyadi 2 review

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான உறியடி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் வெளியாகியுள்ளது. முதல் பாகம் ரசிகர்களை கவரும் விதமாக நன்றாக இருந்தும் புதுமுகங்கள் நடித்த சிறிய பட்ஜெட் படம் என்கிற அளவில் பெரும்பாலான ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய்விட்டது. அந்த வகையில் அதன் இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்திலேயே நடிகர் சூர்யா இதன் இரண்டாம் பாகத்தை தயாரித்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது..

தென்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று எந்தவித பராமரிப்பு பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர செய்யப்படாமலேயே இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வேலைக்குச் சேர்கிறார்கள் விஜய்குமார், சுதாகர் மற்றும் சரவணன் ராசையா மூவரும். இந்த ஆலையில் ஆபத்தான வாயு கசிவால் அவ்வப்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த மூவர் கூட்டணியில் ஒருவரை காவு வாங்குகிறது. ஒரு கட்டத்தில் ஊருக்கே அது பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு செல்கிறது.

இந்த ஆலை முதலாளியோ உள்ளூர் ஆளுங்கட்சி அரசியல்வாதியையும் அந்தப் பகுதியில் ஜாதி அரசியல் செய்யும் அரசியல்வாதியையும் கைக்குள் போட்டுக்கொண்டு பிரச்சனைகளை அமுக்க பார்க்கிறார். ஆனால் இளைஞர்களை ஒன்று திரட்டி இந்த உண்மையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த துடிக்கிறார் விஜய்குமார்.. அவரால் அது சாத்தியமானதா என்பது மீதிக்கதை.

ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை ஆகியவற்றுக்கெல்லாம் எதிராக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அடிக்கடி போராடி வரும்போது எங்கோ தொலைதூரத்தில் உள்ள மற்றவர்கள் அதை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து இருப்போம். ஆனால் அவர்களின் அச்சம் எவ்வளவு நியாயமானது, அவர்களது தினசரி வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது நமக்குத் தெரிய நியாயமில்லை இல்லை.. ஆனால் முதன்முறையாக உறியடி-2 படம் அப்படி ஒரு அனுபவத்தை நமக்கு ஏற்படுத்து தந்திருக்கிறது..

இயக்குனராக தெளிவான திரைக்கதை அமைப்புடன் படத்தை இயக்கி இருப்பது போல் ஒரு ஹீரோவாகவும் அளவுகோலை மீறாமல் கதைக்கு தேவையான மிகச்சரியான பங்களிப்பை தந்து அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் விஜய்குமார். அதற்காகவே அவருக்கு இரண்டு பூங்கொத்துகள் கொடுக்கலாம் தாங்களே படத்தை இயக்கி, நடிக்கவும் செய்யும் இயக்குனர்கள் விஜய்குமாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த விஸ்மயா மிகச்சரியான தேர்வு. எதார்த்தம் மீறாமல் அழகாக, குறும்புத்தனம் கொப்பளிக்க நடித்துள்ளார் விஜய் நண்பர்களாக வரும் ‘பரிதாபங்கள்’ சுதாகர் காமெடியுடன் குணச்சித்திர கதாபாத்திரமாக புதுமுகம் காட்டியிருக்கிறார்.

செங்கை குமார் என்கிற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வரும் சங்கர் ஒரு நிஜமான ஜாதி கட்சி தலைவரின் செயல்பாடுகளை கண்முன் நிறுத்துகிறார். செல்லூர் ராஜுவின் சாயலில் அரசியல்வாதி தமிழ்குமரனாக வரும் புதுமுகம் ஆனந்த்ராஜ் கவனிக்க வைக்கிறார்.

உண்மையான ஆலை முதலாளி தோற்றார் போங்கள் என சொல்லும் அளவிற்கு மிக எதார்த்தமான நடிப்பால் நம்மை கோபம் கொள்ளச் செய்கிறார் ராஜ் பிரகாஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துரை ரமேஷ்.. படத்தில் நடித்துள்ள இன்ன பிற கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாரும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் ஒரு ஆலையின் பயங்கரத்தை, எந்நேரமும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற த்ரில்லிலேயே நம்மை இருக்கையில் கட்டிப் போட்டுவிடுகின்றன.

சாதிக்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல், அதே சமயம் மக்களின் உயிருடன் விளையாடும் சில ஆலை முதலாகளின் அட்டகாசம் என இரண்டையும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல மீது அழுத்தமாக நம் மனதில் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர் விஜயகுமார்.. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய விழிப்புணர்வு படம் என்கிற பட்டியலில் உறியடி-2 இடம்பிடிக்கிறது.