உன் சமையலறையில் – விமர்சனம்


நாற்பது வயதை தாண்டிய ஒருமுதிர் கண்ணனுக்கும் முப்பதைக்கடந்த முதிர்கன்னிக்கும் பார்க்காமலேயே ஏற்படும் காதல், கடைசியில் கைகூடியதா என்பதே ‘உன் சமையலறையில்’.

தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரகாஷ்ராஜ் கட்டை பிரம்மச்சாரி. விதவிதமாக சாப்பிட விரும்பும் சாப்பாட்டு பிரியர். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போன நிலையில் இருக்கும் முதிர்கன்னி சினேகா.. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.. இவர்கள் இருவருக்கும் இடையே சாப்பாடு விஷயத்திலே ராங் காலால் ஏற்படும் ஒரு மோதல் பின்பு நட்பாக மாறி, அது காதலாக கனியும் காலமும் வருகிறது.

ஆனால் இருவருக்கும் உள்ள தாழ்வு மனப்பான்மை காரணமாக தாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது எங்கே மற்றவருக்கு தன்னை பிடிக்காமல் போய்விடுமோ ஒரு சின்ன சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் பிரகாஷ்ராஜ் இளைஞனான தனது அக்கா மகனையும் அதேபோல சினேகாவும் பதிலுக்கு தனது சார்பாக தன்னுடன் தங்கியிருக்கும் இளம்பெண்ணையும் அனுப்புகின்றனர்.

ஹோட்டலில் சந்திக்கும் இந்த இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள தங்களை அனுப்பியவர்களிடம் உங்களது வயதுக்கு நீங்கள் விரும்பும் நபர் பொருந்தமாட்டார்கள் என சொல்லிவிட்டு தங்களது காதலை தொடர்கிறார்கள். இதனால் மனமுடைந்த பிரகாஷ்ராஜ், சினேகா இருவரும் விரக்தியின் விளிம்பிற்கே போய்விடுகிறார்கள். கடைசியில் உண்மை தெரிந்து அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

சமையல் என்கிற ஒரு விஷயத்தை நாயகன், நாயகி என இரண்டு பக்கமும் பொதுவில் வைத்து அதன்மூலம் ஒரு ‘காதல் கோட்டை’ கட்ட முயற்சித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஏற்கனவே மலையாளத்தில் வெளிவந்து ஹிட்ட்டித்த ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக்தான் இது.

45வயது பிரம்மச்சாரி கேரக்டரில் பிரகாஷ்ராஜ் கன கச்சிதம். பொண்ணு பார்க்கப்போன இடத்தில் சமையல்காரனின் கைப்பக்குவம் பிடித்துவிட பொண்ணுக்குப்பதிலாக அவரை அழைத்துவந்துவிடும் காட்சி பிரகாஷ்ராஜின் ட்ரேட் மார்க். தனக்கு திருமணம் ஆகாததை இலகுவாகவும், தான் விரும்பிய பெண் கையில் இருந்து நழுவும்போது கனமாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். சினேகாவும் அவ்விதமே.. சொல்லப்போனால் பிரகாஷ்ராஜைவிட ஒரு படி அதிகமாகவே தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இருவரின் காதலுக்கு ஆப்புவைக்கும் வில்லத்தனமான காதலர்களாக நடித்திருக்கும் துறுதுறு தேஜுவும் க்யூட் சம்யுக்தாவும் ஓகே.. பாச்மார்க் வாங்கிவிடுகிறார்கள். சமையற்காரனாக வரும் தம்பி ராமையா, பிரகாஷ்ராஜின் நண்பனாக வரும் குமரவேல் மற்றும் ஐஸ்வர்யா, பியூட்டி பார்லர் நடத்தும் ஊர்வசி என துணை கதாபாத்திரங்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையில் ‘’இந்த பொறப்புதான்’ நம்மை விதவிதமாக சாப்பிட தூண்டும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. க்ளைமாக்ஸிற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக பின்னணி இசையின் மூலம் காட்சிக்கு கனம் சேர்க்கிறார் இசைஞானி.

பிரீதாவின் ஒளிப்பதிவு நம் வீட்டு சமயலறையில் நம்மை அமரவைத்து விதவிதமாக பரிமாறுகிறது.
டைரக்ஷனும் பிரகாஷ்ராஜ் தான். வசனத்தில் அவருக்கு துணை புரிந்திருக்கிறார்கள் விஜியும் ஞானவேலும். பார்க்காமலே வரும் காதலில் உண்மைத்தன்மையை மறைக்கும் அளவுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை காதலர்களிடம் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இயல்பு மாறாமல் சித்தரித்திருக்கிறார் இயக்குனர் பிரகாஷ்ராஜ்.

ஆனால் நட்பு என்பதற்காகவே தொடர்ந்து தனது படங்களில் குமரவேல், ஐஸ்வர்யா ஆகியோரை முக்கிய கேரக்டரில் நடிக்கவைத்திருப்பது அவர்களது கதாபாத்திரத்தை மனதில் ஆழமாக பதியவைக்க மறுக்கிறது. மற்றபடி ‘உன் சமயலறையில்’ அளவு சாப்பாடுதான் என்றாலும் திருப்தியான சாப்படுதான்.