உள்குத்து – விமர்சனம்

அட்டகத்தி தினேஷ், நந்திதா இணைந்து நடித்து, கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ‘உள்குத்து’.. டைட்டிலே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுவதாக இருக்க, படம் அந்த வேலையை சரியாக செய்திருக்கிறதா..? பார்க்கலாம்.

மீனவ கிராமம் ஒன்றில் அனாதையாக வரும் அட்டகத்தி தினேஷுக்கு, அவரை பணக்காரர் என நினைத்து அடைக்கலம் கொடுக்கிறார் பாலசரவணன். அவரது தங்கை நந்திதாவும் தினேஷை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் லோக்கல் தாதாவான சரத் லோகிதஸ்வாவின் கையாளை அடிக்கிறார் தினேஷ். அதை கேட்க வந்த அவரது மகன் திலீப் சுப்புராயனையும் பிரித்து மேய்கிறார். ஆனால் அடுத்து நடைபெறும் படகுபோட்டியில் கலந்துகொண்டு வெற்றியை திலீப் சுப்புராயனுக்கு விட்டுக்கொடுக்கிறார்.

இதை அறிந்ததும் கபடி விளையாட்டு மூலம் ஆட்களை காலி பண்ணும் சரத் லோகிதாஸ்வா, தினேஷையும் ஆட்டத்துக்கு அழைக்கிறார். ஆனால் அதிலும் சரத்தை மண்ணை கவ்வ வைக்கும் தினேஷ், தான் சரத்தின் மீது வைத்துள்ள மரியாதையால் தான் அவரது மகனுக்கு படகுப்போட்டியில் விட்டுக்கொடுத்ததாக கூறி ட்விஸ்ட் அடித்து அவரது நன்மதிப்பை பெறுகிறார்.

ஒருகட்டத்தில் திலீப் சுப்புராயனை அவரது ஆட்களிலேயே சிலர் போட்டுத்தள்ள முயற்சிக்க, அவரை காப்பற்றும் தினேஷ் அவரை நடக்கடலுக்கு அழைத்துச்சென்று தன் கையால் கொல்கிறார். அதையடுத்து ஒன்று அறியாதவர் போல சரத்திடம் சென்று அவரது மகனை கொன்றவரை தான் கண்டுபிடிக்கிறேன் என சொல்ல, இவர் எதற்கு இப்படி உள்குத்து வேலை பார்க்கிறார் என புரியாமல் முழிக்கிறார் பாலசரவணன்.

ஏதேச்சையாக இவரது அடிதடி செயல்களை பார்த்துவிட்ட நந்திதா, தினேஷின் உண்மை முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேநேரம் பாலசரவணனுக்கு தினேஷ் பணக்காரர் அல்ல, அவர்கள் வீட்டு கார் ட்ரைவர் என்கிற உண்மை தெரியவருகிறது. அதுமட்டுமல்ல தினேஷின் அடுத்த டார்கெட் சரத்தை போட்டுத்தள்ளுவதுதான் என்பதும் தெரியவருகிறது.

உண்மையில் தினேஷ் யார்..? எதற்காக திலீப் சுப்புராயனையும் சரத்தையும் அவர் கொல்லவேண்டும் என்பதற்கு வலுவான பிளாஸ்பேக் விடை சொல்கிறது. அதை தொடர்ந்து வரும் க்ளைமாக்ஸில் என்ன நடந்தது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வித்தியாசமான போலீஸ் கதையாக ‘திருடன் போலீஸ்’ படத்தை தந்த இயக்குனர் கார்த்திக் ராஜூ, இந்தப்படத்தில் உள்குத்து மூலம் எதிரிகளை பழிவாங்ககும் கதையை ஆக்சன் பிளாக்கில் கொடுத்துள்ளார். படம் ஆரம்பித்தில் இருந்து, நாயகன் அட்டகத்தி தினேஷ் ஒவ்வொரு ஆளாக அட்டாக் பண்ணுவதில் இருந்து ஏன், எதற்காக என்கிற எதிர்பார்ப்பு நம்மை தொற்றிக்கொள்வது உண்மை. பின்னால் சொல்லப்பட்டிருக்கும் அதற்கான காரணமும் நெகிழ வைப்பதாக இருக்கிறது.

குருவி தலையில் பனங்காய் போலத்தான் என்றாலும் தனது கேரக்டரை பிசிறு தட்டாமல், ஆக்சனில் இறங்கி அடித்திருக்கிறார் தினேஷ். இவரெல்லாம் ஆக்சன் பண்ணுவாரா என நாம் கேள்வி கேட்கமுடியாதபடி திரைக்கதையை நகர்த்தி பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜூ. அதுதான் அட்டகத்தி தினேஷிற்கு பலமாக மாறியுள்ளது.

நாயகி நந்திதா அவ்வப்போது சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார் என்றாலும் பாந்தமான, குறும்புத்தனமான செய்கைகளால் மனதில் நிற்கிறார். திலீப் சுப்பராயனின் பாசாங்குத்தனமான வில்லத்தனம் மிரளவைக்கிறது. சரத் லோகிதஸ்வாவை நீண்டநாளைக்குப்பிறகு இந்தப்படத்தில் தான் சரியானபடி பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒருபக்கம் மகன் இறந்துகிடக்க, இன்னொரு பக்கம் பழையசோறு சாப்பிடும் காட்சியில் மனிதர் பின்னுகிறார்.

திருடன் போலீஸ் படத்தைப்போலவே பாலசரவணனை இதிலும் மீண்டும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ‘சுறா சங்கர்னா சும்மாவா’ என கெத்துகாட்டி, பின் தினேஷிடமும் சரத்திடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகளில் தவறாமல் கலகலப்பூட்டுகிறார்.

பிளாஸ்பேக்கில் வரும் ஜான் விஜய், சாயா சிங் இருவருமே தங்களது அழுத்தமான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். குறிப்பாக ரவுடிகளிடம் வேலை பார்ப்பவன் இரக்கம் காட்டினால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணமாக ஜான் விஜய்யின் கேரக்டர் அமைந்துள்ளது. உள்குத்து என்கிற டைட்டிலுக்கு தனது கேரக்டரால் நியாயம் செய்திருக்கிறார் நடிகர் ஸ்ரீமன்.

அடிக்கடி வந்தாலும் கூட தேவைப்படும் இடங்களில் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருப்பதும், படத்தின் கதையோட்டத்தை தடைசெய்யாமல் இருக்க பாடல் காட்சிகளும் காதல் காட்சிகளும் மிதமாக கையாளப்பட்டிருப்பதும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்ல வைக்கிறது.

மொத்தத்தில் ‘உள்குத்து’ ஒரு நீட்டான கமர்ஷியல் ஆக்சன் படம் என்பதில் சந்தேகமே இல்லை.