உச்சகட்டம் – விமர்சனம்

uchakaattaam movie review

ஒரு மிகப்பெரிய ரிசார்ட் ஒன்றில் ஒரு புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது ராஷ்மியிடம் தனது காதலை தெரிவிக்கிறார் ஆதித்யா.. ஆப்போது காரில் மறந்து வைத்துவிட்டு வந்த செல்போனை ஆதித்யா எடுத்து வருவதற்குள் ஹோட்டல் அறையில் இருக்கும் ராஷ்மி அந்த ஹோட்டலில் இன்னொரு பக்கத்தில் நிகழும் கொலை ஒன்றை பார்த்து ஏதேச்சையாக அதை மொபைல் போனில் வீடியோவாகவும் படம் பிடிக்கிறார். இதைக்கண்டு அதிர்ந்த கொலைக் கும்பல் ராஷ்மியை, துரத்த, இந்த விபரங்கள் எதுவும் அறியாத ஆதித்யாவும் கொலை கும்பலிடம் சிக்குகிறார்.

ஒரு கட்டத்தில் ஆதித்யா தப்பித்தாலும் ராஷ்மியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வில்லன் தர்மேந்திரா, ஆதித்யாவிடம் கைமாறிய அந்த வீடியோவை ஒப்படைக்கும்படி மிரட்டுகிறார். வழியில் காரில் எதிர்ப்படும், தனக்கு முன்பின் அறிமுகமில்லாத கரிஷ்மாவிடம் காதலியை காப்பாற்ற உதவும்படி கேட்கிறார் ஆதித்யா. ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக அவரும் எதிரிகள் வசம் சிக்கும் சூழ்நிலை உருவாகிறது. ஹோட்டலில் கொலை செய்யப்பட்டது யார், கொலை செய்தது யார், ஆதித்யாவால் தனது காதலியையும் தனக்கு உதவிசெய்ய வந்த பெண்ணையும் காப்பாற்ற முடிந்ததா என்பது மீதிக்கதை.

கன்னடத்தில் ஏற்கனவே வெற்றிபெற்ற படத்தை உச்சகட்டமாக தமிழில் வெளியிட்டுள்ளார்கள்.. ஆனால் கன்னட படம் பார்ப்பது போன்ற உணர்வு இல்லாமல் ஒரு அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தை பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது.

ஓங்குதாங்கான உருவத்துடன் நாயகன் ஆதித்யாவாக வரும் தாகூர் அனூப் சிங் அதிரடி சண்டைக்காட்சிகளில் நம்மை கவர்கிறார். படம் முழுவதும் கொலை கும்பலிடமிருந்து தப்பிப்பது, அவர்களிடம் சிக்குவது என மாறி மாறி தனது முழு சக்தியையும் கொடுத்து இந்த படத்தில் நடித்துள்ளார் ராஷ்மியாக நடித்துள்ள தன்ஷிகா.

உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கரீஷ்மாவாக நடித்துள்ள தான்யா போப்பிற்கு இடைவேளைக்கு பின்பு நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. அவரும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். படத்தில் கிஷோர் இருக்கிறார் என்றாலும் அவருக்கான வேலைகள் மிகவும் குறைவே. ஆனால் ஹீரோவுக்கு இணையாக வில்லன் தர்மேந்திரா வரும் கபீர் துகான் சிங் வில்லத்தனம் மற்றும் அடிதடி இரண்டிலுமே சேர்ந்து கலக்கி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக தேஜா கதாபாத்திரத்தில் வரும் ஷ்ரவன் ராகவேந்திராவும் கனகச்சிதமான வில்லன் தேர்வு தான். இடைவேளைக்கு பிறகு என்ட்ரி கொடுக்கும் துடிப்பான நேர்மையான போலீஸ் அதிகாரியாக வம்சி கிருஷ்ணாவும் இந்த படத்தில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

சஞ்சய் சவுத்ரியின் பின்னணி இசை தடதடக்க வைக்கிறது. படத்தில் விறுவிறுப்பு எங்கும் குறையாமல் பார்த்துக்கொண்டு உள்ளது. கூடவே விஷ்ணுவர்தனின் ஒளிப்பதிவு கர்நாடகா மாநில காடுகளை அங்குலம் விடாமல் அலசி இருக்கிறது. கதையின் மீதான நம்பகத் தன்மைக்கும் இது பக்கபலமாக நின்று இருக்கிறது.

படத்தை இயக்கியுள்ள சுனில்குமார் தேசாய் விறுவிறுப்பு ஒன்றே குறிக்கோள் என கடிவாளம் போட்டது போன்று நேர்கொண்ட பார்வையுடன் படத்தை படு ஸ்பீடாக நகர்த்துகிறார். கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஒரு பாடல் காட்சி வைத்தது கூட தமிழ் சினிமாவின் சமரசத்திற்காகத்தான் இருக்கும். கதாநாயகி வில்லன் கும்பலிடம் மீண்டும் மீண்டும் பிடிபட்டு தப்புவது போன்ற காட்சிகளை சற்று மாற்றி அமைத்திருக்கலாம்.. யார்யா அந்த சண்டை பயிற்சியாளர் என கேட்க வைக்கும் அளவிற்கு அதிரடியான சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது.

மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த உச்சகட்டம் படம் உச்சகட்டமான மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை.