யு டர்ன் – விமர்சனம்

u turn review

வேளச்சேரி மேம்பாலத்தில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு காரணம் பாலத்தில் உள்ள சென்டர் மீடியன் கற்களை ஒதுக்கிவிட்டு சிலர் அவ்வப்போது விதி மீறி யு டர்ன் எடுப்பது தான் என்பதை கண்டுபிடிக்கிறார் ரிப்போர்ட்டரான சமந்தா. அப்படி யு டர்ன் அடித்த ஒரு நபரை சந்தித்து பேட்டியெடுக்க சமந்தா செல்ல, அவர் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்துகொள்கிறார்.

அவரது மரணத்திற்கு காரணம் சமந்தாவாக இருக்கலாமோ என போலீஸ் அவரை அழைத்து விசாரிக்கிறது. ஆனால் சமந்தாவோ, தான் ஒரு கட்டுரைக்காக இப்படி விதி மீறி யூடர்ன் எடுக்கும் நபர்களை செலக்ட் செய்ததாகவும் இதேபோல விதிமீறிய இன்னும் பத்து பேரின் விலாசம் தன்னிடம் இருப்பதாகவும் கூறுகிறார். தன்னை நம்பும் போலீஸ் அதிகாரி ஆதியின் உதவியுடன் விசாரிக்கையில் அந்த பத்து பேரும் ஏற்கனவே தற்கொலை செய்து மர்மமான முறையில் இறந்துபோனது தெரிய வருகிறது.

இவர்கள் அனைவருமே யு டர்ன் எடுத்த அதே தேதியில் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்த, இந்த உண்மை தெரிந்து அடுத்தடுத்த நாட்களில் யு டர்ன் எடுக்கும் நபர்களை காப்பாற்ற முயற்சித்தும் ஆதி மற்றும் சமந்தாவால் முடியாமல் போகிறது. இதன் மர்மத்தை கண்டுபிடிக்க தானே ரிஸ்க் எடுத்து யு டர்ன் அடிக்கிறார் சமந்தா.. அவரால் இந்த யு டர்ன் மரணங்களின் பின்னணியை கண்டுபிடிக்க முடிந்ததா, அல்லது யூ டர்ன் மர்மத்தில் சிக்கி இவரும் பலியானாரா..? என்பது க்ளைமாக்ஸ்

படத்தின் முக்கால்வாசி சுமையை தூக்கி சுமந்திருக்கும் சமந்தாவை விட இன்னொருத்தர் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பாரா என்பது சந்தேகம் தான். அவருடன் கூடவே பயணிக்கும் போலீஸ் அதிகாரி ஆதியின் சினிமா கேரியரில் இந்தப்படம் இன்னொரு ‘ஈரம்’.. செமத்தியாக ஸ்கோர் செய்கிறார். நரேன்-பூமிகாவின் பிளாஷ்பேக் இறுதியில் வந்தாலும் படத்தின் திருப்புமுனைக்கு காரணமாக அமைகிறது. சமந்தாவின் காதலராக வரும் ராகுல் ரவீந்திரன், போலீஸ் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன், இன்னும் பிற நடிகர்கள் தங்கள் பங்களிப்பை மிகச்சரியாக அளித்துள்ளனர்.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் எடுக்கும் வேகத்தை இறுதி வரை கொஞ்சம் கூட குறையவிடால் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர் பவண் குமார். ஒரே பாணியில் நடக்கும் மர்ம மரணங்களுக்கான தேடலை விறுவிறுப்பாகியவர், அதன் காரணம் என்னவென நம்மிடம் உடைக்கும் போதும் அதன் பின்னணியில் இருப்பது யார் என தெரிவரும் போதும் நமக்கு உண்மையிலேயே செம ஷாக்காகத்தான் இருக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸில் கடைசி பத்து நிமிடத்தில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக அடுக்கி நம்மை இருக்கை நுனிக்கு வரவழைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் பவண் குமார்

குறிப்பாக சாலை விதிகளை மீறும் யாரோ ஒருவரால் அவர் மட்டுமல்ல, முகம் தெரியாத பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதை அழுத்தமான மெஸேஜாக மனதில் ஏற்றி அனுப்புகிறார் இயக்குனர்.

கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் திகில், த்ரில், சஸ்பென்ஸ் என கலந்துகட்டி அடிப்பதால், கட்டாயம் இன்னொரு முறை படம் பார்க்க வேண்டுமென பலரும் தியேட்டருக்கு யு டர்ன் அடிக்க தயங்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.