மோகன்லால் படத்திற்காக உலாவரும் இரண்டு ‘பெருச்சாழி’ ரயில்கள்..!


ஷங்கர் நண்பன் படத்தில் ஒரு முழு ரயிலுக்கு பெயின்ட் அடித்து பிரமாண்டப்படுத்தினாரே… ஞாபகம் இருக்கிறதா. அதேபோல  கேரளாவிலும் இரண்டு ரயில்களை ஓட விட்டிருக்கிறார்கள். ஆனால் இது மோகன்லால் நடித்துள்ள ‘பெருச்சாழி’ படத்தின் விளம்பரத்துக்காக.

பரசுராம் எக்ஸ்பிரஸ் மற்றும் எர்நாடு எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்களின் பெட்டிகளின் வெளிப்பக்கம் முழுவதும் பெருச்சாழி’ படத்தின் விளம்பரங்களாக காட்சியளிக்கின்றன. இந்த இரண்டு ரயில்களும் கேரளாவின் வடகோடியில் இருந்து தென்கோடி வரை சென்று வருவதால் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்.

பிரசன்னா, சினேகா இருவரின் காதலுக்கும் அதைத் தொடர்ந்து திருமணத்துக்கும் அச்சாரம் போட்ட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ‘தலைவா’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மும்பை பெண்ணாக நடித்த ராகினி நந்த்வானியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.? அவர்தான் இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் வரும் ஆகஸ்ட்-29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.