ட்ரிப் – விமர்சனம்

நடிகர்கள் : யோகிபாபு, கருணாகரன், சுனைனா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர்
டைரக்சன் : டென்னிஸ் மஞ்சுநாத்

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு ஜாலி ட்ரிப் வருகிறார்கள் சுனைனா மற்றும் அவரது நண்பர்கள்… வந்த இடத்தில் காட்டு பங்களா ஒன்றுக்கு பெயின்ட் அடிக்க செல்லும் யோகிபாபு-கருணாகரன் இருவரையும் பார்த்து பயப்படுகிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக சுனைனா இவர்கள் இருவரிடமும் மாட்டிக்கொள்கிறார்.. ஆனால் அவர்கள் இருவரும் நல்லவர்கள் என்பது தெரியாமல் நண்பர்கள் குழு சுனைனாவை அவர்களிடம் இருந்து மீட்க முயல்கிறது.

இந்த முயற்சியில் நண்பர்கள் ஒவ்வொருவராக மர்மமாக கொல்லப்படுகிறார்கள். மீதி இருக்கும் நண்பர்களுக்கு ஒருகட்டத்தில் இதற்கு காரணம் யோகிபாபு மற்றும் கருணாகரன் இருவருமே இல்லை என்பது தெரியவருகிறது. இருதரப்பும் ஒன்றாக இணைந்து இந்த கொலைகளை செய்வது யார் என கண்டுபிடிக்க முயற்சிக்கையில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான அறிவியல் உண்மையும் அதற்கு பின்னணியில் இருக்கும் நபர்களும் தெரிய வருகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் இன்னும் சில உயிரிழப்புகளின் ஏற்படுகின்றன.

கொலையாளிகள் யார், எதற்காக இந்த நண்பர்களை கொல்கிறார்கள், மீதி உள்ளவர்கள் அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பது மீதிக்கதை.

இதற்கு முன்பும் இதேபோல ஜாலி ட்ரிப் செல்லும் இளைஞர் கூட்டம், அவர்கள் கொல்லப்படுவது என பல படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படத்தில் அந்த கொலைகாரர்கள் யார் எதற்காக கொல்கிறார்கள் என்கிற காரணம் தான் இந்த ட்ரிப்பை சற்றே வித்தியாசப்படுத்துகிறது.

த்ரில்லர் படம் என்றாலும் கசாயத்தை தேனில் குழைத்து கொடுப்பது போல, யோகிபாபு, கருணாகரன் இருவரையும் வைத்து காமெடி பிளேவரையும் கலந்திருக்கிறார்கள். அதனால் சில நேரங்களில் த்ரில் மூடுக்கு சென்று விட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஜாலி மூடுக்கு வந்துவிடுகிறோம்.

இலவசமாக கிடைத்த தக்காளியில் பாதி அழுகியிருந்தாலும் மீதி லாபம் தானே என்பதுபோல, யோகிபாபு, கருணாகரனின் காமெடி பல இடங்களில் நம்மை ரிலாக்ஸ் செய்யவைப்பது என்னவோ உண்மைதான். நாயகி சுனைனா என்றாலும் ஆரம்ப காட்சிகளில் பயந்து அலறிவிட்டு, பின்னால் வீரப்பெண்மணியாக மாற முயற்சித்திருக்கிறார்.. அதிலும் காட்டுக்குள் தன்னை கொல்லவரும் நாயுடன் அவர் நடத்தும்போராட்டம் பரிதாபப்பட வைக்கிறது. நண்பர்களாக நடித்திருக்கும் கல்லூரி வினோத், ஜெனிபர் உள்ளிட்ட மற்றவர்களும் ஏகத்துக்கு அலறல்களும் கதறல்களுமாக ஒருகட்டத்திற்கு மேல் அலுப்பேற்றவே செய்கிறார்கள். மொட்ட ராஜேந்திரனை இன்னும் கொஞ்சம் அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம்.

படத்தை இயக்கியுள்ள டென்னிஸ் மஞ்சுநாத் அறிவியல் ரீதியான ஒரு வினோதமான விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை சுற்றி ஒரு த்ரில்லரையும் பாதுகாப்புக்காக சரிவிகித காமெடியையும் கலந்திருக்கிறார்.

மொத்தத்தில் ஜாலியாக ஒரு படம் பார்த்துவிட்டு வரலாம் என நினைப்பவர்களுக்கு இந்த ட்ரிப் சில இடங்களில் (மட்டும்) புது அனுபவத்தை கொடுக்கும்.