“டைட்டில் தப்பா வச்சிருக்கீங்களே” – ஆதங்கப்பட்டார் இயக்குனர் சேரன்..!


மலையாளத்தில் இருந்து தமிழில் படம் பண்ணவேண்டும் என முடிவுசெய்து, தமிழ், மலையாளம் என இருமொழிகளில் தயாரித்து, தமிழில் அதற்கு ‘திருந்துடா காதல் திருடா’ என பெயரும் வைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் சென்னையிலேயே நடத்தியுள்ளார்கள்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மிழிகள் சாட்சி’, சுரேஷ்கோபி நடித்த ‘வெண்சங்குபோல்’ உட்பட நான்கு படங்களை இயக்கிய, சிறந்த படத்திற்கான தேசிய விருதும் பெற்ற அசோக் ஆர்.நாத் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மலையாள நடிகர் முகேஷ் நடித்திருக்கிறார்.

இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சேரன் இசைக்குறுந்தகட்டை வெளியிட்டார். அவர் பேசும்போது, “இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது பல நல்ல விஷயங்கள் தென்பட்டன. குறிப்பாக மூன்று தலைமுறையினரின் காதலை இந்தப்படத்தில் சொல்லியிருப்பதாக இயக்குனர் குறிப்பிட்டார். ஆனால் அப்படிப்பட்ட உணர்வுப்பூர்வமான படத்திற்கு ‘திருந்துடா காதல் திருடா’ என எப்படி டைட்டில் வைத்தார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. டைட்டில் தவறாக இருக்கிறது. படம் பார்க்க வரும் ஆடியன்சை அப்படியே திருப்பிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. அதை கொஞ்சம் கவனித்து சரிசெய்தால் ஒரு நல்ல படம் ரசிகர்களை சென்றடையும்” என உண்மையை நேருக்கு நேராக கூறிவிட்டு அமர்ந்தார். அனேகமாக படம் ரிலீசாவதற்குள் பெயர் மாறினாலும் மாறலாம்.