துப்பறிவாளன் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் வருகின்ற அளவுக்கு டிடெக்டிவ் பற்றிய படங்கள் வருவதில்லை.. அந்த குறையை போகும் விதமாக வெளியாகியுள்ளது ‘துப்பறிவாளன்’.

கனியன் பூங்குன்றன் என்கிற அழகிய தமிழ்ப்பெயர் கொண்ட துப்பறிவாளர் விஷால்.. எப்போதும் வலதுகை போல கூடவே இருக்கும் நண்பன் பிரசன்னா. சின்னச்சின்ன துக்கடா கேசுகளை விரும்பாத விஷால், மூளைக்கு வேலை வைக்கும் புத்திசாலித்தமான கேசுகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்.. சிறுவன் ஒருவன் நாய்க்குட்டி சுடப்பட்டு இறந்துபோனதை கூறி அதை கண்டுபிடித்து தருமாறு கேட்கிறான். விஷாலின் மூளைக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தோன்றவே அந்த விவகாரத்தை ஆராய்கிறார்..

அவர் எதிர்பார்த்தது போலவே ஒன்றைத்தொட்டு ஒன்றாக பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவருகின்றன. கூடவே விஷாலின் நடவடிக்கைகளை முடக்க, எதிரிகள் ஆத்திரத்துடன் களமிறங்குகின்றனர்.. இதில் விஷால் தரப்பிலும் கொஞ்சம் சேதம் ஏற்படுகிறது. யார் எந்த எதிரிகள், அவர்களது டார்கெட் என்ன..? விஷாலிடம் அவர்கள் சிக்கினார்களா..? என்பது மீதிப்படம்.

இந்த பத்து வருடங்களில் நாம் பார்த்துவந்த விஷாலில் இருந்து இந்த கனியன் பூங்குன்றன் கேரக்டர் நூறு சதவீதம் தனித்து தெரிகிறது. நடை உடை, பேச்சு, ஸ்டைல் என எல்லாவற்றிலும் மாறியிருக்கிறார் விஷால்.. அப்படி மாற்றியிருக்கிறார் மிஷ்கின்.. கிட்டத்தட்ட ஷெர்லக் ஹோம்ஸின் தமிழ் அவதாரமாகவே மாறியுள்ளார் விஷால்.. தனது வீட்டில் வேலை பார்க்கும், தன்னை விரும்புகின்ற அனு இம்மானுவேலிடம் கூட துளியும் ரொமான்ஸ் இல்லாமல் கடுகடுக்கும் விஷால் நமக்கு புதிதான ஆள்.

‘இதனை இவன் கண் விடல்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப பிரசன்னாவுக்கு கூடக்குறைச்சல் இல்லாத நேர்த்தியான கேரக்டர்.. விஷாலின் வலதுகையாகவே மாறிவிட்டார் போங்கள். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் பிரசன்னாவின் பங்கு சபாஷ்.. கதாநாயகியாக மலையாள வரவு அனு இம்மானுவேல், அவ்வப்போது புன்னகை முகத்துடன் தோன்றி, பரிதாபமான முடிவை தேடிக்கொள்கிறார்.

ஹீரோக்களை எல்லாம் வில்லனாக்கி அழகு பார்ப்பதுதானே மிஷ்கினின் பணி.. இதிலும் அதற்கு குறை வைக்காமல் வினய், பாக்யராஜ் என வில்லன் டீமில் சேர்த்திருக்கிறார்.. போதாக்குறைக்கு ஆண்ட்ரியாவையும்.. இடைவேளை வரை இந்த டீமுக்கு பெரிதாக வேலை இல்லாவிட்டாலும், இடைவேளைக்குப்பின் மிரட்டலாக வேலை பார்த்திருக்கின்றனர். சிம்ரன் இரண்டே இரண்டு காட்சிகளில் வந்து போவதால் அவரைப்பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.

பாடல்களே இல்லை என்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.. அவ்வப்போது ஒலிக்கும் ‘இவன் துப்பறிவாளன்’ என்கிற தீம் சாங் இனிமையாக ஈர்க்கிறது. அரோல் குரோலியின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் யார் என கேட்க வைக்கிறார் கார்த்திக் வெங்கட்ராமன்..

ஒரு சிக்கலான வழக்கை துப்பறியும்போது ஏற்படும் அனைத்து சங்கடங்களையும் சவால்களையும் மிகைப்படுத்தாமல் காட்சிப்படுத்தியுள்ளார் மிஷ்கின்.. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் தெரிந்தாலும் அவை காட்சியின் அழகியல் தன்மைக்காகவே மீறப்பட்டிருக்கின்றன. வில்லன் டீமின் பேக்ரவுண்ட் பற்றி கிளியர் கட்டாக சொல்லாதது இன்னொரு குறை.. தேவையில்லை என மிஷ்கின் நினைத்திருக்கலாம்.

தமிழ்சினிமாவில் புதிய முயற்சிகளை, புதிய கோணங்களில் கையாளும் மிஷ்கின் இந்தப்படத்தில் ரசிகனை உற்சாகப்படுத்தவே செய்கிறார்.