பொங்கலுக்கு ரோந்து வரும் மூன்று போலீஸ்காரர்கள்…!

 

இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் சீசன் என்றால்  விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் ஆகியோர்களில், எவரேனும் இருவராவது ஒரே நேரத்தில் போலீஸ் கேரக்டர்களில் புகுந்து ஆளுக்கு ஒரு பக்கம் ரவுடிகளையும் தீவிரவாதிகளையும் கலங்கடிப்பார்கள்..

ஆனால் இப்போதோ ஹீரோக்கள் போலீஸ் கேரக்டர்களில் நடிப்பது ஏதோ அத்திப்பூத்தாற்போல தான் நடக்கிறது. ஆனால் வரும் பொங்கல் பண்டிகைக்கு மூன்று ஹீரோக்கள் போலீஸ் கேரக்டராக நடித்துள்ள படங்கள் வெளியாக இருக்கின்றன.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலும், தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள ‘காக்கிசட்டை’ படத்தில் முதன் முதலாக சிவகார்த்திகேயனும் போலீசாக நடிக்கிறார்கள்..

அஜித்தும், விஷாலும் இதற்கு முன் ஏற்கனவே ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த சிவகார்த்திகேயன் போலீஸாக நடித்திருப்பதுதான் நம் ஆவலை தூண்டுகிறது. பொங்கல் வந்தால் தெரிந்துவிடும்.. சிவகார்த்திகேயன் சிரிப்பு போலீஸா, இல்லை சீரியஸ் போலீஸா என்று..?