தோழர் வெங்கடேசன் – விமர்சனம்

காஞ்சிபுரம் பகுதியில் தனது வீட்டிலேயே சின்னதாக கோலி சோடா தயாரிக்கும் கம்பெனி நடத்திக்கொண்டு தனி ஒரு ஆளாக வாழ்க்கை நடத்தி வருகிறார் ஹரி சங்கர். அவருக்கு நன்கு பழக்கமான இட்லி கடைக்கார பெண்ணான சர்மிளா திடீரென மாரடைப்பால் மரணம் அடைய அவரது மகள் மோனிகா அனாதை ஆகிறார். அவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் ஹரி சங்கர். எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கி ஹரி சங்கரின் இரண்டு கைகளும் துண்டாகி விட, அதன்பிறகு அவருடைய கைகளாக மாறி சோடா கம்பெனியை தானே எடுத்து திறம்பட நடத்துகிறார் மோனிகா.

இந்த நிலையில் ஹரி சங்கர் விபத்து வழக்கு இழப்பீடு தொகை கிடைப்பதற்கு மாதக்கணக்கில் தாமதமாகி இறுதியில் ஒருவழியாக பேருந்தை ஜப்தி பண்ணி அவர் வசம் ஒப்படைக்கிறது நீதிமன்றம். இந்த பேருந்தை வழித்தடத்தில் ஓட்டவும் முடியாமல் தனது வீட்டின் முன் நிறுத்தி அதை பாதுகாக்கவும் முடியாமல் ஹரி சங்கருக்கு அவரது அன்றாட வேலைகளை தாண்டிய தலைவலியாக மாறிவிடுகிறது அந்த பேருந்து..

இந்த நிலையில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த பேருந்து திடீரென ஒரு நாள் காணாமல் போய்விடுகிறது. போலீசில் புகார் கொடுத்துவிட்டு பேருந்தை தேடுகிறார் ஹரி சங்கர் இந்த தேடல் அவரையும் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் மோனிகாவையும் என்ன நிலைக்கு ஆளாக்குகிறது என்பதுதான் மீதிக்கதை

ஒரு சாமான்ய மனிதனின் கதையைத்தான் தோழர் வெங்கடேசன் என்கிற படமாக இயக்கியுள்ளார்கள். பேருந்தில் அடிபட்டு பலி ஆனார்கள் என தினசரி செய்தித்தாளில் செய்தி வராத நாளே கிடையாது.. இதையெல்லாம் ஒரு நிமிடம் படித்துவிட்டு நாம் கடந்து போய் விடுகிறோம். ஆனால் பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை என்பது எவ்வளவு நரகமாக, வேதனை மிகுந்ததாக இருக்கிறது என்பதை இந்தப் படத்தின் வாயிலாக காட்சிப்படுத்தி அதிரவைக்கிறார் இயக்குனர் மகா சிவன்.

நாயகன் ஹரி சங்கர் புதுமுகம் என்பது போலவே தெரியவில்லை அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டுவிட்டார்.. நடிப்பில் அவ்வளவு யதார்த்தம்.. குறிப்பாக பாதி படத்திற்கு மேலே இரண்டு கைகளையும் இழந்த நிலையில் அவர் நடித்து இருப்பது படத்தின் கதையுடன் நம்மையும் ஒன்ற வைக்கிறது.. நஷ்ட ஈடு கிடைக்காமல் கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் அலையும் ஒவ்வொருவரின் நிலையும் இப்படித்தான் இருக்கும் என்பதை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார் ஹரி சங்கர்.

அவருக்கு சற்றும் சளைக்காத கதாபாத்திரத்தில் நாயகி மோனிகா.. முதலில் ஹரி சங்கரை ஏற்றுக்கொள்ள தயங்குவது, பின் அவருக்கு உறுதுணையாக மாறுவது, சோடா ஃபேக்டரி தொழிலை தானே திறம்பட நடத்துவது என ஒரு மனிதநேயமுள்ள நட்பான தோழியாக நம் கண்களுக்கு தெரிகிறார் மோனிகா.

பேருந்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டாலும் அதில் அலட்சியம் காட்டும் போலீஸ்காரராக போராளி திலீபன் ரசிக்கவைக்கிறார் அதேபோல ஹரி சங்கருக்கு உதவியாக பேருந்தை அவ்வப்போது இயக்கி உதவி செய்கின்ற, அதே சமயம் சங்கடங்களையும் இழுத்து விடும் அந்த டிராக்டர் டிரைவர் படத்தின் காமெடி காட்சிகளை கவனித்துக்கொள்கிறார். கவுன்சிலர் வில்லனும் தன் பங்கை சரிவர் செய்திருக்கிறார். ஹரி சங்கரின் லாயராக வருபவர் படு யதார்த்தமான நடிப்பில் நம்மை கவர்கிறார். ஒளிப்பதிவாளர் வேத் செல்வம் கதைக்களமான காஞ்சிபுரம் பகுதிக்கு தனது ஒளிப்பதிவு மூலம் நம்மை அழைத்துச் செல்கிறார்.

இதுவரை யாரும் தொடாத ஆனால் இந்த சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயமாக இந்த பஸ் ஜப்தி என்கிற கான்செப்ட்டை கையில் எடுத்த இயக்குனர் மகா சிவனை பாராட்டியே தீரவேண்டும். இதுவரை பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித இழப்பீடும் கொடுக்காமல் அரசாங்கமும் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் கால தாமதப்படுத்தும் அவலத்தை இதைவிட தெளிவாக யாராலும் சொல்லிவிட முடியாது.

அதேசமயம் இந்த பிரச்சனை இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கும் இதற்கு தீர்வு இல்லை என்று சொல்லும் விதமாக கிளைமாக்ஸில் அவ்வளவு கனத்த முடிவை எடுத்து இருக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வியும் ஒரு பார்வையாளராக நமக்குள் எழுகிறது.. அதே சமயம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வும் இந்த கேடுகெட்ட நாட்டில் நிகழத்தான் செய்கிறது என்கிற ஆதங்கத்துடன் தான் தியேட்டரை விட்டு வெளியே வருகிறோம் இந்த படம் ரசிகர்களால் கைகொடுத்து தூக்கிவிடப்பட வேண்டிய ஒரு படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.